
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி விடுதலை நாள் அறிவிப்பில் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தினார். இதை அடுத்து உலகச் சந்தைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பலர் தேர்ந்தெடுத்ததால் தங்கத்தின் விலை உலக அளவில் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3038 டாலராக இருக்கிறது.
சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரி நாடுகளாக பார்க்கப்படும் நிலையில் இந்தியா, கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நட்பு நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் வர்த்தகப் போரை தொடர்ந்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக கனடா, இந்தியா, மெக்சிகோ, சீனா உள்ளீட்டு நாடுகளுக்கு அந்த இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் அதே அளவு வரியை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் என கூறியிருந்தார். இதற்கு சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி விடுதலை நாள் என்ற பெயரில் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால் உலகின் பல பணக்காரர்கள் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பை இழந்தனர். இது ஒரு புறம் இருக்க உலக அளவில் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற நிலையில் தற்போது வரை 20 முறை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.வரும் காலங்களில் வெள்ளியின் விலையும் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதும் குறைந்த அளவிலாவது தங்கத்தை வாங்கி வைப்பதும் எதிர்கால முதலீட்டுக்கு நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.



