
பாட்னா: காங்கிரசாரை போல நேர்மையற்ற மற்றும் ஏமாற்றுக்காரர் யாரும் இல்லையெனப் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா விமர்சனம் செய்துள்ளார்.
பீஹார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி என்ற இடத்தில் நடந்த, பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: கொரோனா தடுப்பூசி தயாரிக்கும்போது, இந்தத் தடுப்பூசி சரியில்லையென எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். ஆனால் அவர்கள் ரகசியமாகப் போய்ப் போட்டுக் கொண்டனர். பின்னர் இது மோடியின் தடுப்பூசி, போடாதீர்கள் எனப் பிரசாரம் செய்தனர். காங்கிரசாரை போல நேர்மையற்ற மற்றும் ஏமாற்றுக்காரர் யாரும் இல்லை.
2014ம் ஆண்டுக்கு முன், ஒரு பஞ்சாயத்தில் 2 வீடுகள் மட்டுமே வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இருந்தது, அதேசமயம், பா.ஜ., ஆட்சியில் நாடு முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு ஊராட்சியில் சுமார் 40 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சிலிண்டர்கள் உங்கள் வீடு தேடி வர வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு குழாய்மூலம் மலிவான விலையில் வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

