Uttarakhand Landslide:நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களை மீட்க நடவடிக்கை!

Advertisements

டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இமயமலை மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள கோவில்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்கள் ஆன்மிக சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை. அதேபோல் ஆதி கைலாஷ் பகுதிக்கும் அதிகமானவர்கள் புனித யாத்திரை சென்று வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வசந்தா (வயது 58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), விஜய

லட்சுமி (62), வாசுகி (69), குமாரி (61), பராசக்தி (75) உள்ளிட்ட 17 பெண்கள் உள்பட 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.

அவர்கள் 30 பேரும் கடந்த 1-ந் தேதி சென்னை வந்து, அங்கிருந்து ரெயில் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து வேன் மூலம் அனைவரும் உத்தரகாண்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

இதற்கிடையே உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழர்கள் 30 பேரும் ஆதிகைலாஷ் பகுதிக்கு வேனில் புறப்பட்டனர்.

அப்போது பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்ற போது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில், தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் தமிழர்கள் 30 பேரும், ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களால் அங்கிருந்து திரும்பி வர முடியாத நிலை உருவாகி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உத்தரகாண்ட் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் தங்களின் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களின் உறவினர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதித்ய செந்தில்குமாரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக அரசும் 30 தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசினார்.

கலெக்டர் ஆதித்ய செந்தில்குமார், தமிழக அரசு சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்ட கலெக்டர் கோசுவாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை போக்கு

வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இன்று 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர்.

இது குறித்து கலெக்டர் ஆதித்ய செந்தில்குமார் கூறியதாவது:-

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக யாத்திரை பயணமாக சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 30 பேரும் சிக்கிக்கொண்டனர்.

இதில் ராணிப்பேட்டை, சீர்காழி, பெங்களூரை சேர்ந்தவர்கள் 6 பேர் ஆவர். மீதம் உள்ளவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அங்கு ஆசிரமம் அருகே உள்ள முகாமில் பாதுகாப்பாக உள்ளனர்.

அவர்களை பத்திரமாக மீட்குமாறு பித்தோரகர் மாவட்ட கலெக்டர் கோசுவாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி உள்ளேன். இன்று வானிலை சீராக இருந்தால் நிலச்சரிவில் சிக்கி உள்ள 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என அம்மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘சிதம்பரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலாசுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி 30 பேரையும் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *