Advertisements

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்காவிட்டாலும், அரசியல் வட்டாரங்களில் ‘யார் யாருடன் சேரப் போகிறார்கள்?’ என்ற கேள்வி தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக தலைமையிலான கூட்டணி வடிவமைப்பில் வேகம் காட்டப்பட்டு வரும் நிலையில், சில முக்கிய அரசியல் தலைவர்கள் இன்னும் தெளிவான முடிவை எடுக்காமல் காத்திருப்பது அரசியல் சூழலை மேலும் குழப்பமாக மாற்றியுள்ளது.
இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும், தவெக தலைவர் நடிகர் விஜய் எடுக்கும் அரசியல் முடிவை எதிர்பார்த்து, எந்தப் பக்கம் செல்லும் தீர்மானத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
2026 தேர்தலை நோக்கி, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது கணக்குகளை போடத் தொடங்கியுள்ளன. இதுவரை மிகவும் வலுவானதாக கருதப்பட்ட திமுக கூட்டணியில்கூட, இடைக்கிடை கருத்து வேறுபாடுகள், சீட் பங்கீடு தொடர்பான அதிருப்திகள் போன்றவை லேசாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. மறுபுறம், அதிமுக – பாஜக – பாமக கூட்டணி பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால், அந்தக் கூட்டணியில் அடுத்ததாக எந்த கட்சிகள் இணையப் போகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்தச் சூழலில்தான், ஒருகாலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக எடுக்கும் முடிவு, அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவற்ற சூழலே தொடர்கிறது. கடந்த ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என முன்பே பிரேமலதா கூறியிருந்தார்.
ஆனால், மாநாட்டு மேடையில் அவர் பேசுகையில், “ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இன்னும் தங்கள் கூட்டணியை அறிவிக்காத நிலையில், நாம் மட்டும் ஏன் அவசரம் காட்ட வேண்டும்?” எனக் கூறி, எந்த நேரடி அறிவிப்பும் இல்லாமல் ஒதுங்கிக் கொண்டார். இந்தப் பேச்சே, தேமுதிக இன்னும் முடிவெடுக்காமல் ‘காத்திருப்பு அரசியல்’ மேற்கொண்டு வருகிறது என்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க பொதுச்செயலர் டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமமுக – தவெக கூட்டணி உருவாகலாம் என்றும், அல்லது மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக இடம் பெறலாம் என்றும் இருவிதமான கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால், தினகரன் தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தெளிவான சிக்னலும் வெளிவரவில்லை.
இதே நேரத்தில், தனித்தனி அரசியல் பாதையில் பயணித்து வந்த ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும், அண்மைக் காலமாக இணைந்து செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் எந்தக் கூட்டணியில் இணையப் போகிறார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியாத சூழலில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை, தவெக தலைமையிலான கூட்டணியில் இணைக்க, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பின்னணியில்தான், “தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கின்றன. அந்த 30 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும்” என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பேச்சு, அவர் இன்னும் முடிவெடுக்காத நிலையிலேயே இருப்பதையும், கடைசி நேரம் வரை சூழலை கண்காணித்து முடிவு எடுக்கலாம் என்ற மனநிலையிலும் இருப்பதையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் தங்கள் அடுத்த கட்ட அரசியல் நகர்வை உறுதியாக அறிவிக்காமல், தவெக தலைவர் விஜய் எடுக்கும் முடிவை எதிர்பார்த்து, “ஆத்துல ஒரு கால்… சேத்துல ஒரு கால்” என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்தக் காத்திருப்பு அரசியல், திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளுக்கும் கூட்டணி அமைப்பதில் கூடுதல் குழப்பத்தை உருவாக்கி, 2026 தேர்தல் அரசியலை மேலும் சிக்கலானதாக மாற்றி வருகிறது.
Advertisements


