இன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்!

Advertisements

பழனி:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

இன்று மாலை 5.30 மணிக்குச் சாயரட்சை பூஜைக்குப் பிறகு மூலவருக்கும், சண்முகருக்கும் காப்பு கட்டப்படும். தொடர்ந்து துவார பாலகர்கள், நவவீரர்கள், மயில், தீபக்கம்பம் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்படும். அதன்பின் மாலை 6 மணிக்குச் சண்முகார்ச்சனையும், சண்முகர்தீபாராதனையும் நடைபெறும்.

இரவு 7 மணிக்குத் தங்க ரத புறப்பாடு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து 6 நாட்களும் பூஜைகள் நடைபெறும். வருகிற 12ந் தேதி முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்குச் சாயரட்சை பூஜையின்போது நடைபெறும்.

திருக்கார்த்திகை தீபம், சொக்கபனை ஏற்றும் நிகழ்வுகள் மறுநாள் 13ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தரிசனம் நடைபெறும். மாலை 4.45 மணிக்கு மேல் சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கபனை கொளுத்தப்படும். அதனைத் தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு வருகிற 13ந் தேதி பாதுகாப்பு கருதி பழனி அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது. அதாவது கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் யானைப்பாதை வழியாகவும், இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மதியம் 2 மணிக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 6 மணிக்குப் பிறகு பக்தர்கள் வழக்கம்போல் செல்லலாம். கார்த்திகை தீபத்திருநாளன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *