
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முக்கியமான பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து கடைசி அணியாக வெளியேறியது. எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேற, 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியேறியது.
கடைசியில் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில், கேகேஆர் அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாகச் சாம்பியனானது. இந்த நிலையில் தான் வரும் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் குறைந்தது 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு குறித்து அறிவிக்கவில்லை. ஆதலால் வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டுவரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியானது சென்னையின் புறநகர் பகுதியில் செயல்திறன் மையம் ஒன்றை திறக்க உள்ளது. இந்தச் செயல்திறன் மையத்தின் தலைமை பொறுப்பானது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்தச் செயல்திறன் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசனை சொல்வது, என்ன பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பானது அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிஎஸ்கேயின் செயல்திறன் மையத்திற்கு அஸ்வினுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் விரைவில் சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியிருப்பதாவது: பொதுவாக ஒரு வீரரை ஏலத்தில் எடுப்பது என்பது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. அது ஏலத்தின் தன்மை மற்றும் வீரர்களுக்கான வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்து தான் அமைகிறது.
இப்போது உயர் செயல்திறன் மையத்தில் பொறுப்பேற்கிறார். அதனுடைய செயல்பாடுகளை அவர் தான் கவனித்துக் கொள்வார். தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் அணியான டிஎன்சிஏ முதல் டிவிசன் அணிக்காக விளையாடுவார். ஆரம்ப காலகட்டத்தில் அஸ்வின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இணைந்து கிரிக்கெட் விளையாடி வந்தார்.
அதன் பிறகு தான் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலும் இடம் பெற்று விளையாடினார். இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகிக் கெம்ப்லாஸ்ட் நிறுவனத்தின் அணியில் சேர்ந்தார்.
இதையடுத்து 2018 ஆம் ஆண்டு டேக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் இணைந்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு திரும்பியுள்ளார்.



