Advertisements

“ஒரு நல்ல தலைவனாக செதுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால், சிலையைத்தான் செதுக்க முடியும், சிலரைச் செதுக்கவே முடியாது என்பதை புரிந்து கொண்டேன்” என பாமக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கும் வீடியோவில் அன்புமணியை குற்றம்சாட்டிப் பேசியுள்ளார் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல், தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல மாதங்களாக முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த விவகாரம் நாளுக்கு நாள் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாமகவில் முடிவில்லாமல் செல்லும் தந்தை – மகன் மோதல் பாமகவின் வாக்கு வங்கியை பதம் பார்க்கக்கூடும் என்ற பேச்சு நிலவுகிறது.கட்சி யாருக்கு சொந்தம்? யாருக்கு தொண்டர்களின் பலம் அதிகம்? என்பது மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது.மாம்பழம் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் மீதான உரிமை குறித்து இரு தரப்பும் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இரு தரப்பும் மாறி மாறி பொதுக்குழு, செயற்குழுவை நடத்தி போட்டி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 29 ஆம் தேதி) பாமக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துகிறார் ராமதாஸ். அன்புமணி தரப்பின் கடுமையான எதிர்ப்பை மீறி இக்கூட்டம் நடைபெற உள்ளதால் இக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “சேலத்தில் நடைபெறவுள்ள பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரமே எஞ்சியுள்ளது. இந்தக் கூட்டம் வெறும் நிர்வாக நிகழ்வு அல்ல.
இது உண்மையான பாமகவின் மறுபிறப்பு. இது குடும்ப சண்டையல்ல பதவிக்கான போர் அல்ல. நாம் எல்லோரும் சேர்ந்து உழைத்து உருவாக்கிய இயக்கத்தின் ஆன்மாவை காப்பாற்றும் போராட்டம். எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி கும்பல் என்னைப் பற்றி என்னென்னவோ கூறி வருகின்றன… அசிங்கப்படுத்துகின்றன.
ஆனால், இந்தக் கட்சியைக் காயப்படுத்தாதீர்கள்.
இந்தக் கட்சி எனக்கு வந்த சீதனமோ, பரம்பரை சொத்தோ கிடையாது. இது நானாக கட்டிய மக்கள் கோட்டை. இப்போது இந்தக் கட்சி பலவீனமாக நிற்கும்போது பெற்ற வயிறு பற்றி எரிகிறது. நான் என் மகன் அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு. தலைமைப் பண்பு தானாகவும், தியாகத்திலும் வரவேண்டும். அன்புமணிக்கு எம்.பி, மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா பதவி என பதவிகள் வழங்கினோம். அவருக்கு பொறுப்புகள் தான் வந்தன… பொறுப்புணர்ச்சி அல்ல.
அதற்கு உதாரணம், அன்புமணியின் நாடாளுமன்ற வருகை வெறும் 30% மட்டுமே. விவாதங்களின் போது ஒரு எம்.பி சராசரியாக 79 விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அன்புமணி கலந்துகொண்டது என்னவோ ஏழு. இப்படி எம்.பி பதவியை வீணடித்தது போல, கட்சியில் அவர் செய்ததும் நிறைய இருக்கிறது. பெற்ற அப்பனுக்கே துரோகம் செய்பவர் இந்த இயக்கத்தைப் பின்னர் காப்பாற்றுவாரா என்பதை அன்புமணி பக்கம் இருக்கும் என் தொண்டர்கள் யோசியுங்கள். ஒரு நல்ல தலைவனாக செதுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால், சிலையைத்தான் செதுக்க முடியும், சிலரைச் செதுக்கவே முடியாது என்பதை புரிந்து கொண்டேன்.
ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாமக இன்று அங்கீகாரத்தையே இழந்த நிலையில் உள்ளது. இதற்கு காரணம் உழைப்பின்மையும், பொறுப்பற்ற தலைமையும்தான். கட்சித் தலைமை குறித்த கோரிக்கைகள் இன்று சட்ட ஆய்வின் கீழ் உள்ளது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் எழும்போது. கட்சி எப்படி முன்னேறும்? சேலத்தில் கூடும் பொதுக்குழு பாமகவின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் வென்று, ஆட்சியில் பங்கு பெற்று, இழந்த அங்கீகாரத்தையும், கட்சிச் சின்னத்தையும் மீட்டெடுக்கப் போகும் பயணத்தின் முதல் படி இந்த பொதுக்குழுக் கூட்டமாகும்.
இது என் கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால் என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும். இந்த இயக்கத்துக்காகவும், என் மக்களுக்காகவும் போராடுவேன். சேலம் பொதுக்குழுவில் கலந்து கொண்டு, உண்மையோடும். உழைப்போடும், உண்மையான பாமகவோடும் நிற்க ஒவ்வொரு தொண்டரும் முன்வர வேண்டும்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
Advertisements


