
ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அமைச்சருடன் அங்குள்ள கடற்படைத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார். இன்று அவர் சிட்னியில் உள்ள பாட்ஸ் பாயின்ட் கடற்படைத் தளத்துக்குச் சென்றார். ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பீட்டர் கலீல் அவரை வரவேற்றுத் தளத்துக்குள் அழைத்துச் சென்று அதன் வசதிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
ஆஸ்திரேலிய கடற்படையில் உள்ள மிகப்பெரிய போர்க்கப்பல்களையும், கடலோரக் காவல்படை ரோந்துக் கப்பல்களையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
இந்திய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்கள் ரோந்துக் கப்பலில் சென்றபடி சிட்னியில் உள்ள கடற்படைத் தளத்தைச் சுற்றிப் பார்த்தனர்.
சிட்னிக் கடற்படைத் தளத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு ஆறரை விழுக்காடு என்ற விகிதத்தில் வளர்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி கடந்த நிதியாண்டில் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாயாகவும், தளவாட ஏற்றுமதி 23 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
