
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெரம்பாரா அருகேயுள்ள செங்கோரத் பஞ்சாயத்தில் பட்டியலினத்தை சேர்ந்த உன்னி வெஞ்வேரி என்பவர் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் உன்னி வெஞ்சேரி தொல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர் வெற்றி பெற்றார். இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர் பஞ்சாயத்து தலைவராக இருந்ததால், மாட்டு சானம் தெளித்து அலுவலகத்தை சுத்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, 10 நாட்களுக்குள் கோழிக்கோடு மாவட்ட எஸ்.பி விரிவான அறிக்கை அளிக்கும்படி, தேசிய எஸ்.சி. எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உன்னி வெஞ்சேரி கூறுகையில், ” ஐக்கிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மேலும் 3 பேர் மற்ற பஞ்சாயத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த பஞ்சாயத்தில் பட்டியலினத்தவர் பஞ்சாயத்து தலைவராக இல்லை. இதனால், அங்கெல்லாம் இது போன்று சுத்தப்படுத்தவில்லை. நான் பட்டியலினத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த பஞ்சாயத்தில் இப்படி செய்துள்ளனர். இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த தலைவர்களும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளையில் , இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ‘இந்த பஞ்சாயத்தில் ஊழல் தலைவிரித்தாடியது. ஊழலை வெளியேற்றியதை சுட்டி காட்டும் வகையில் தண்ணீரை கொண்டே அலுவலகத்தை இளைஞர்கள் சுத்தப்படுத்தினர்’ என்று தெரிவித்துள்ளனர்.



