
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 11 திருமணமான பெண்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தில் பணத்தைப் பெற்ற பிறகு தங்கள் காதலர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த PMAY திட்டம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிரந்தர வீடு கட்ட உதவுகிறது.
உ.பி.. மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள், PMAY திட்டத்தின் கீழ் முதல் தவணையாகச் செலுத்தப்பட்ட ரூ. 40,000 பணத்தை எடுத்துக்கொண்டு, தங்கள் கணவனை விட்டுவிட்டு, தாங்கள் கள்ளக்காதலர்களுடன் ஓடிப்போனதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம்குறித்து அந்தப் பெண்களின் கணவர்கள் காவல் நிலையத்திலு புகார் அளித்ததன் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் துதிபாரி, ஷீத்லாபூர், சாடியா, ராம்நகர், பகுல் திஹா, கஸ்ரா, கிஷுன்பூர் மற்றும் மெதௌலி ஆகிய கிராமங்களில் சுமார் 2,350 பயனாளர்களுக்கு அண்மையில் PMAY திட்டத்தின் கீழ் நிதி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓட்டம்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து குறிப்பிட்ட PMAY பயனாளர்களின் இரண்டாவது தவணையை செலுத்துவதை நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
PMAY திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஏழைக் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ. 2.5 லட்சம்வரை மானியம் வழங்குகிறது. இது அவர்களின் வருமானத்திற்கு ஏற்பவும், குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடும். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணம் வழங்கப்பட்ட குடும்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளைக் கண்டறியப்பட்டால் அவர்கள் பயனாளிகளிடம் பணத்தைத் திரும்பக் கேட்கலாம்.
உத்தரபிரதேசத்தில் இது போன்ற வினோத சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பெண்கள் தங்கள் காதலர்களுடன் ஓடிப்போன சம்பவங்கள் பல உள்ளன. கடந்த ஆண்டும், PMAY திட்டத்தின் ஒரு பகுதியாக, 50,000 ரூபாய் பெற்ற பிறகு, நான்கு திருமணமான பெண்கள் தங்கள் காதலர்களுடன் ஓட்டம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.


