
மகாராஷ்டிரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு 31 ஆயிரத்து 628 கோடி ரூபாய் மதிப்பில் இழப்பீடு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் கனமழையாலும் வெள்ளத்தாலும் 29 மாவட்டங்களில் 68 இலட்சம் எக்டேர் நிலங்களில் பயிர்கள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட உழவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஏற்கெனவே மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் சிண்டே, அஜித் பவார் ஆகியோரும் உடனிருந்தனர்.
மழை வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வுக்கும் 31 ஆயிரத்து 628 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் அறிவித்தார். பயிர் சேதமடைந்ததற்கு எக்டேருக்கு 47 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
சேதமடைந்த வீடுகள், கடைகளை மீண்டும் கட்டுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
