Lok Sabha Election 2024: மூன்றாவது உலகப்போரை தடுக்க பிரதமர் மோடி வெற்றி பெறவேண்டும்!

Advertisements

பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் சண்டை காரணமாக மூன்றாவது உலகப்போர் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கும் சக்தி நமது பிரதமருக்கு இருப்பதால் நரேந்திர மோடியை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை இன்று சூலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில், பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பாப்பம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரை ஆற்றிய அண்ணாமலை, ‘1972ம் ஆண்டு விவசாயிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் உயிர்நீத்து தியாகிகளாக உள்ள இடத்தில் பிரசாரம் செய்வதை மரியாதைக்குறியதாகக் கருதுகிறேன். இன்றைய சூழலில் உலக அளவில் மீண்டும் ஒரு உலகப் போர் வரக்கூடிய நிலை உருவாகி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது.

இப்போது இஸ்ரேல், ஈரானுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. வருங்காலத்தில் சவுதி அரேபியா நாட்டில் போர் பதற்றம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில் மூன்றாம் உலகப்போர் வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கும் திறன்கொண்ட உலக தலைவராக மோடி திகழ்கிறார். போர்களை நிறுத்தி உலக அமைதியை கொண்டு வரும் திறன் மோடி அவர்களுக்குத்தான் உள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கான தலைவராக மோடி திகழ்கிறார். அவருடைய பேச்சுக்களும், கருத்துக்களும் உலக அளவில் மதிக்கப்படுகிறது. எனவே, நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும், உலக அமைதிக்காகவும் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தத் தேர்தல் நாட்டை ஆளக்கூடிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். இம்முறை 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்று மோடி பிரதமராக வேண்டும்’ எனப் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *