Kolkata Female doctor murdered case:நண்பர்கள் மற்றும் பெற்றோர் கூறிய அதிர்ச்சி தகவல் !

Advertisements

உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகத் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் தங்கள் மகளின் கொலை தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர். படுகொலையான பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, வழக்கைப் போலீசார் கையாண்ட முறையைப் பார்த்ததும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். தற்போது சி.பி.ஐ. முயற்சி எடுத்து வழக்கை விசாரிக்கிறது. சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியில் உள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார். [ஆனால், அதில் இடம் பெற்றுள்ள விவரங்களைப் பற்றிக் கூற மறுத்து விட்டார்]

தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளைக் குறித்து விமர்சித்த அவர், தொடக்கத்தில் மம்தா மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அவர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், இதே விசயங்களைக் கூறும் பொதுமக்களை அவர்கள் கட்டிப்போட முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் பேசுகையில், நாட்டில் உள்ள மக்களுக்கு நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். எங்களது மகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் அனைவருக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். குற்றவாளிகள் முழுமையாகப் பிடிபட்டு நீதி கிடைக்கும் வரை எங்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இனி இப்படியொரு நிலைமை வேறு எந்தத் தாய்க்கும் வரக் கூடாது என்பதே எங்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *