
காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்குமான டொனால்டு டிரம்பின் திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
காசா சிக்கலைத் தீர்த்து அமைதி நிலவச் செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்முயற்சியில் எகிப்தில் இஸ்ரேல் அரசுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே பேச்சு நடைபெற்றது.
டிரம்பின் மருமகன் ஜேர்டு குஷ்னரும் பங்கேற்ற இந்தப் பேச்சின் முடிவில் காசா அமைதித்தீர்வுக்கான முதற்கட்டத் திட்டம் கையொப்பமானது. அதன்படி காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்வதுடன், அங்குள்ள படைகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுதலை செய்ய வேண்டும். இஸ்ரேல் இராணுவமும் கைது செய்துள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும்.
டிரம்பின் முயற்சியால் எட்டப்பட்டுள்ள முதற்கட்ட உடன்பாட்டுக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி காசாவின் 53 விழுக்காடு பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேற வேண்டும்.
அதேபோல் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகள் 20 பேரை மூன்று நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும்.
இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீனர்கள் 1700 பேரையும், சிறைகளில் உள்ள 250 பேரையும் விடுவிக்க உள்ளதாகப் பாலஸ்தீன அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
