
அதிமுக – பாஜகவுக்குள் இன்னும் பெரிய அளவிலான கட்சிகள் கூட்டணிக்குள் நுழையாத நிலையில், சீட் பேரங்கள் நடப்பதாக தெரிகிறது.. அந்தவகையில், கூட்டணி கட்சிகளுக்கு 100 சீட்களை தரவேண்டும் என்று பாஜக அழுத்தம் தந்து வருவதாகவும், அந்த அழுத்தத்தை எடப்பாடியால் தாங்க முடியவில்லை என்றும் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், “அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமி செயற்குழு மற்றும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டியதற்கு அவசியம் என்ன?
காரணம், ஓபிஎஸ், குருமூர்த்தியோடு டெல்லி பயணம்தான் எடப்பாடியின் இந்த அவசரத்துக்கு காரணம்.. அந்த பொதுக்குழுவின் மூலம் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.அதேபோல கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும்படி பாஜக உத்தரவிடுகிறதாம்.ஓபிஎஸ்-க்கு 10 சீட், டிடிவி தினகரனுக்கு 12, புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு 7 சீட், ஜான் பாண்டியன், ஜிகே வாசன் போன்றோருக்கு சீட் ஒதுக்கும்படி சொல்கிறது.
அதாவது எதிர்காலத்தில் தங்களுக்கு தேவைப்படும் மேற்கண்ட கட்சிகளுக்கு அதிமுகவை சீட் ஒதுக்க சொல்கிறது பாஜக. இந்த அழுத்தம் அதிமுகவுக்குள் கடந்த ஒரு மாத காலமாகவே அதிகரித்து வருகிறது. கட்சிக்குள் துரோகிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று சிவி சண்முகம் சொல்கிறார், அதிமுக தரும் சீட்டுக்களை கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெயக்குமார் சொல்கிறார்.. எடப்பாடியின் குரலாகவே இவர்கள் இதுபோல் கருத்து கூறி வருகிறார்கள். போதாக்குறைக்கு பொதுக்குழு மூலம் மொத்த அதிகாரத்தையும் தீர்மானம் இயற்றி பெற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இத்தனைக்கும் கூட்டணி கட்சிகள் யாருமே அதிமுகவை நோக்கி வரவில்லை.. அப்படியிருக்கும்போது 210 தொகுதிகள் என்பது சாத்தியமா என்று தெரியவில்லை.ஆனால் பாஜக நிலைப்பாடு என்ன? அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக உள்ளது.. ஆனால், ஆட்சி அமைத்த பிறகு யாரை முதலமைச்சராக அமர்த்துவது? எடப்பாடியே பதவியில் இருந்தாலும் 6 மாதத்தில் தமிழகத்தில் காவிக் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும் என்பதே அமித்ஷாவின் திட்டமாக உள்ளது. இதுதான் பீகாரில் நடந்தது, மகாராஷ்டிராவில் நடந்தது.. அதுபோல தமிழகத்திலும் நடக்க பாஜக முடிவு செய்துள்ளது.
அதனால்தான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யார் டெல்லிக்கு போனாலும் அமித்ஷாவையும், நிர்மலா சீதாராமனையும் சென்று சந்திக்கிறார்கள்.. அப்படியானால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நிர்மலா சீதாராமன்தான்.. அந்தவகையில் 2026-31-க்குள் கண்டிப்பாக பாஜக கொடி கோட்டையில் பறக்கும்.. அதில் மாற்றமேயில்லை.எனினும் பாஜக கூட்டணிக்கும் சேர்த்து 100 சீட்டுகள் கேட்கிறது.. இந்த சீட் விஷயத்தை பேசி முடிவு செய்யுமாறு நயினார் நாகேந்திரனுக்கு அசைண்மெண்டாகவும் அமித்ஷா தந்துள்ளார்.எனவே எடப்பாடியிடம் நயினார் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி சிறிதும் வளைந்து தரவில்லை.
கடைசிவரை தாங்கள் கேட்டும் சீட்டுகளை அதிமுக தராவிட்டால், கூட்டணியை முறித்து கொள்ளும் பாஜக.அல்லது கூட்டணி உடைவது போல பாசாங்கு செய்யும். ஏனென்றால் எடப்பாடியை விட்டால் தமிழகத்தில் பாஜகவுக்கு வேறு கூட்டணி இல்லை” என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


