
இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்வதாகவும், 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் பாதுகாப்புத்துறைத் தளவாட உற்பத்தி தொடர்பான கருத்தரங்கில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது, குறுகிய காலத்தில் ஓர் இலக்கை அடைவதற்காக நாம் ஓய்வின்றி உழைத்தால் இறுதியில் அதை அடைந்துவிட முடியும் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்க்கு இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 24 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தளவாட ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இப்போதைய போர்முறைகள் முழுவதுமே தொழில்நுட்பம் சார்ந்தது என்று குறிப்பிட்ட அவர், டிரோன்கள், ஏவுகணைகள், வான்பாதுகாப்புக் கருவிகள் ஆகியவற்றின் மூலம் ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் வல்லமையை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடு என்னும் இலக்கை நோக்கி இப்போது நாம் முன்னேறி வருவதாகவும், பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை அடைவது, அவற்றை ஏற்றுமதி செய்வது, புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிவது ஆகியவற்றின் மூலமே அந்த இலக்கை அடைய முடியும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
