Cuddalore Train Engine Failure: “பயணிகள் ரெயில் திடீர் கோளாறு” பயணிகள் அவதி!

Advertisements

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் பயணிகள் ரெயில்  திடீரென்று மின்சார இணைப்பு கிடைக்காததால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

கடலூர்: மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர், நெல்லிக்குப்பம் வழியாக பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று நடுவழியில் நின்றது. இதனால் அதிர்ச்சிடைந்த பயணிகள் மற்றும் ரெயில் டிரைவர் கீழே இறங்கி பார்த்தனர். பின்னர் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயில் நின்றதற்கான காரணத்தை உடனடியாக பார்வையிட்டனர். அப்போது மின்சாரத்தால் இயங்கி வந்த ரெயிலில் திடீரென்று மின்சார இணைப்பு கிடைக்காததால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளகேட், கருப்பு கேட், காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் ரெயில் வருவதற்காக கேட் மூடப்பட்டிருந்தது.

ஆனால் நடுவழியில் திடீரென்று ரெயில் நின்றதால் சிக்னல் கிடைக்காமல் ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நான்கு பகுதிகளிலும் நீண்ட நேரமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பரிதவித்து காத்துக் கொண்டிருந்தனர். மேலும் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்று நடுவழியில் திடீரென்று நின்ற ரெயிலுக்கு வேறு ஏதேனும் பிரச்சனையா? என பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுமார் 20 நிமிடம் ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு ரெயிலை இயங்க வைத்தனர். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்திற்கு சுமார் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *