
சென்னை :
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அஞ்சலை கைது செய்யப்பட்டார். ஓட்டேரி பகுதியில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சென்னை கமிஷனர் தந்த உறுதி.. ஆனால் நடப்பதோ.. பகுஜன் சமாஜ் திடுக்கிடும் கேள்வி இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது. கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகியான மலர்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து மலர் கொடியை அதிமுகவிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதேபோல கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரனும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஜிகே வாசன் அறிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை என்பவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளிகளுக்கு துப்பு கொடுத்தது, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட செயல்களில் அஞ்சலை ஈடுபட்டதாக போலீசார் கூறியிருந்தனர். இதையடுத்து அவர் வகித்து வந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை ஓட்டேரி அருகே தலைமறைவாக இருந்த அவரை வெள்ளிக்கிழமை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


