
மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்… ஆண்களுக்கும் கட்டணமில்லா பஸ் வசதி – அதிமுக தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது..அது என்னனென்ன வாக்குறுதிகள் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்…..
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படுகிறது.
1. மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்)
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்க, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
2. ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
3. அனைவருக்கும் வீடு (அம்மா இல்லம் திட்டம்)
‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதே போல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதை போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும் போது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்
மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பொதுவாக தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும் இது போன்ற அதாவது மக்களை கவரக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளை தந்து விட்டு , பின்னர் தந்த வாக்குறுதிகளில் பாதியை மட்டும் நிறைவேற்றி விட்டு , பின்னர் விடுப்பட்டுள்ள வாக்குறுதிகளை பற்றி கண்டுகொள்வது இல்லை. இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ள இந்த தேர்தல் வாக்குறுதிகளை பற்றி நீங்கள் நினைப்பது என்ன , மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் என்ன என்பதையும் மறக்காமல் கமெண்டில் பதிவிடுங்கள்.



