சொன்னால் நம்புங்க..நாங்கள் அதைச் செய்யமாட்டோம்!

Advertisements

நாங்கள் அ.தி.மு.க.வைப்பிளவுபடுத்த மாட்டோம் எனச் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை:தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.பி.வேலு மணி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்தி லிங்கத்தை சந்தித்து பேசி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த 12-ந் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் பலரும் திரண்டு சென்றார்கள். ஆனால் எஸ்.பி.வேலுமணி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வேலுமணி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அரசல் புரசலாக அ.தி.மு.க.வுக்குள் பேசப்பட்ட இந்த விவகாரம் தி.மு.க. அமைச்சரான ரகுபதி கொளுத்திப் போட்ட கருத்துக்குப் பிறகு சூடு பிடித்தது.

அவர் கூறும்போது, தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்கப் போவது செங்கோட்டையனா? வேலுமணியா? என்பது தெரிய வரும். பெரிய பிளவு ஏற்படும் என்று கூறினார். அவரது இந்தக் கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சிமீது விஷத்தைக் கக்குகிறார் என்றார்.

சொன்னால் நம்புங்க..

இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, சொன்னால் நம்புங்க நான் ஒரு போதும் அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்தமாட்டேன் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் செங்கோட்டையனும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார். ஆனால் என்னதான் நடக்குது பார்ப்போம் என்பது போல் தொண்டர்கள் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *