இந்த பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பொருள், உயிரின் செயல்பாட்டின் வழியாக ஏற்படும் அதிர்வு காற்றின் அலையின் வழியாக பயணித்து உங்கள் காதுகளின் வழி மூளைக்கு சென்றடைவதே சத்தம் என்று சொல்லப்படுகிறது. அந்த சத்தத்தையே உங்கள் காதுகளுக்கு இனிமையாய், உங்கள் மனம் குளிரும்படி, உணர்வுகளை தூண்டும் சத்தமாக இசைத்தால் அதுவே இசை என்றும் கூறப்படுகிறது.
இப்படி அறிவியல் பூர்வமாக இசைக்கு பல்வேறு விளக்கங்கள் உள்ளன. அதையெல்லாம் தாண்டி ஒரு இசை உங்களை என்ன செய்யும்? களைத்து போன மனதிற்கு, வெறுமையில், வெறுப்பில், கோபத்தில், ஏமாற்றத்தில், பதற்றத்தில் இருக்கும் மூளைக்கு காற்றின் அலைகளால் மருந்திட்டு உங்களை ஆற்றுப்படுத்தும். கண்ணுக்கே தெரியாத பூதமாய் உங்கள் உடலுக்குள் புகுந்து மாயாஜாலங்களால் உங்களை ஆச்சரியப்படுத்தும். சந்தோஷம், துக்கம், வெறுப்பு, கோவம், ஏமாற்றம், வெற்றி, தோல்வி என மனித வாழ்வியலின் அனைத்து உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது இசை.
உலகம் எல்லை கோடுகளாலும், கண்டங்களின் பிரிவுகளாலும், மொழி, இனம், மதம் என பல்வேறு வேற்றுமைகளாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும் உலகத்தின் பொதுவான மொழி என்று ஒன்று உள்ளது அதுவே இசை. இசைக்கு குறிப்பிட்ட மொழியோ அடையாளமோ தேவையாக இருப்பதில்லை. பூமிப்பந்தின் எங்கோ ஒரு மூலையில் இசைக்கப்படும் இசையை, மற்றொரு மூலையில் இருப்பவரால் எளிதில் ரசிக்கமுடிகிறது. எனவேதான், உலக இசை தினம் இசையின் பல்வேறு பரிமாணம் மற்றும் வகைகள் குறித்த பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், இசை என்பதை அனைத்து மக்களுக்கும் சமத்துவமாக வீதிகளில் சென்று வாசித்து பொதுவுடைமை படுத்துவதும் கடைபிடிக்கப்படுகிறது.
உலக இசை தினம் ‘Fête de la Musique’ என்றும் அழைக்கப்படுகிறது. முதன்முதலில் உலக இசை தினம் என்ற ஐடியா 1982ம் ஆண்டு பிரான்ஸ் கலாச்சார அமைச்சராக இருந்த ஜேக் லாங் மற்றும் இசை ஊடகவியலாளர் மாரிஸ் ஃப்ளூரெட் ஆகிய இருவரின் மூலம் முன்மொழியப்பட்டது. இசையின் பன்முகத்தமையை வளர்ப்பது அதை எளிய மக்களிடமும் எடுத்து செல்வது என்ற பல்வேறு முக்கியமான கருப்பொருள்களை இலக்காக கொண்டு இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக இசை தினம் ஒவ்வொரு கருப்பொருளை இலக்காக கொண்டு கொண்டாடப்படுகிறது. அப்படி 2023ம் ஆண்டிற்கான கருப்பொருளாக “Music on the intersections” என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் கடைக்கோடி பிரிவுகளுக்கும் இசை சென்று சேர வேண்டும் என்பதே இதன் மையப்பொருளாகும்.
இசை என்பது இந்த பூமிப்பந்தின் பொதுவுடைமை சொத்து. அதை தனிநபரோ அல்லது குழுவோ சொந்தம் கொண்டாட முடியாது. வர்க்க வேறுபாடுகள் இல்லாமல், எந்த விதமான ஒடுக்குமுறைகளும் இல்லாமல் சமூகத்தின் அத்தனை தரப்பு மக்களுக்கும் இசை சென்று சேர வேண்டும் என்பதே உலக இசை தினத்தின் நோக்கம். அதற்காகவே இந்த தினத்தில் உலகத்தின் பல்வேறு இசைக்கலைஞர்கள் ஒன்றாக முன்வந்து வீதிகளில் நின்று இசையை அனைத்து மக்களுக்கும் பரப்புவர். அதே போல், புதிதாய் இசை கற்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நாளாகவும் இது பார்க்கப்படுகிறது. இயற்கை தந்த இலவச வளங்களில் இசையும் ஒன்று. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அப்படிப்பட்ட உலக இசை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது .