
கோவை மாவட்டம் வால்பாறையில் 12 அடி ஆழமுள்ள குடிநீர்த் தொட்டியில் தவறி விழுந்து தத்தளித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டுத் தாய் யானையிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை டாட்டா காபி எஸ்டேட்டில் சுமார் 12 அடி ஆழம் உள்ள குடிநீர்த் தொட்டி உள்ளது. மூன்று வயதுடைய ஆண் யானைக் குட்டி அதன் தாய் மற்றும் கூட்டத்தோடு அப்பகுதியில் தண்ணீர் குடிக்க வந்தபோது தவறிக் குடிநீர்த் தொட்டியில் விழுந்து தத்தளித்து உள்ளது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகப் பணியாளர்கள் விரைந்துசென்று குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு 6 மணி நேர முயற்சிக்குப் பின்னர் யானைக் குட்டியை நலமுடன் மீட்டு அதன் தாய் யானையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் குட்டி யானையை மீட்ட வனத்துறையினருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.


