தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பிக்களை சஸ்பெண்ட் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த சோக சம்பவம் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.