திமுக – விசிக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி?

Advertisements

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கின்றன. முக்கிய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது விசிக தனது கோரிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது கட்சியின் நிலையை கூட்டணிக்குள் வலுப்படுத்தியது. இம்முறை இரட்டை இலக்கத்தில், குறைந்தபட்சம் 10 தொகுதிகள் வேண்டும் என விசிக வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு ராஜ்யசபா இடத்தையும் கோரி அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்கு 4 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் விசிகவும் தன்னுடைய பங்கைக் கோரத் தொடங்கியுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கட்சி வட மாவட்டங்களில் அமைப்புசார்ந்த வலிமையுடன் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திமுகவுடன் கொள்கை ரீதியாக இணைந்து செயல்பட்டு வரும் விசிக, இந்த முறை அதிக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

ஆனால் திமுக தலைமையோ 8 தொகுதிகள் வரை வழங்கும் யோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா இடம் தொடர்பான முடிவு குறித்து ஸ்டாலின் உடன் இறுதி ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது. உடனடியாக ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா அல்லது அடுத்த சுற்றில் பரிசீலிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஏற்கனவே திருச்சி சிவா மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோரை மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்ப திமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், தொகுதி பங்கீடு மட்டுமல்ல, ராஜ்யசபா கணக்கையும் சுற்றி திமுக–விசிக உறவில் அரசியல் பதட்டம் உருவாகியுள்ளது. இறுதியாக ஸ்டாலின் எவ்வாறு சமநிலை காண்பார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *