வரலாற்றை பதிவு செய்யும் திருவண்ணாமலை கோவில்..!

Advertisements

 நமது பாரத நாடு கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த புனித பூமியாகும். எனவே இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள், திருத்தலங்கள் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்று. மனிதர்களாக பிறந்து வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டு இறுதியில் முக்தியடைவது தான் அனைவரின் விருப்பமாகும்.      அந்த வகையில் சிவபெருமான் பஞ்சபூதங்களில் நெருப்பின் அம்சமாக இருக்கும், “நினைத்தாலே முக்தி தரக்கூடிய” “திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார்” கோவிலின் சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.        திருவண்ணாமலை கோவில் தல வரலாறு மிகவும் பழமையான கோவில்களில் இந்த திருவண்ணாமலைக் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் “அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்” அம்பாள் “உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.

Advertisements


                               பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி எனப்படும் நெருப்பு தன்மை கொண்ட தலமாகும். “பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள்” என பலரும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோவிலை சீரமைத்து கட்டி, இக்கோவிலின் பூஜைகளுக்கான தானங்களையும் அளித்திருக்கின்றனர்.           புராணங்களின் படி ஒரு சமயம் சிவ பெருமானின் தோற்றம் மற்றும் முடிவு என்ன என்பதை பற்றிய விவாதம் “சிவன், பிரம்மா, விஷ்ணு” ஆகிய மூவரிடையே எழுந்த போது சிவபெருமான் இந்த அருணாச்சல மலையில் மிகப்பெரும் அக்னி பிழம்பு உருவத்தை பெற்று நின்றார். அப்போது சிவனின் அடிப்பகுதியை காண விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து கொண்டு சென்றார். பிரம்ம தேவன் ஒரு அன்ன பறவையின் உருவம் கொண்டு சிவபெருமானின் உச்சிப்பகுதியை காண விண்ணை நோக்கி பறந்தாலும், சிவபெருமானின் தொடக்கம் எது என்று அறிய முடியாமல், சோர்ந்து தான் சிவனின் உச்சிப்பகுதியை கண்டதாக பொய்யை கூறினார். இந்த பொய்யை அறிந்த சிவபெருமான் பிரம்ம தேவனுக்கு இந்த பூவுலகில் எங்குமே கோவில் அமையாதவாறு சபித்து விட்டார். இந்த சம்பவத்திலிருந்து இத்தல சிவபெருமானை “அடி முடி காண முடியாத அண்ணாமலையார்” என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.


                               “அருணம்” என்றால் “சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு”. “சலம்” என்றால் “மலை”. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு “அருணாச்சலம்” என்று பெயர் ஏற்பட்டது. தனது கீழான வாழ்க்கையை எண்ணி அவமானமடைந்த “அருணகிரிநாதர்” தற்கொலை செய்து கொள்ள இந்த புனிதமான திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்திலிருந்து கீழே குதித்த போது முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்டு அவரின் அருளால் தீராத நோயிலிருந்தது குணமடைந்து, ஞான நிலையை அடைந்தார்.    முருகனின் புகழை பாடும் “திருப்புகழ்” எனும் பாடல் தொகுப்பையும் இயற்றினார். நாயன்மார்களால் பாடல் தலம் இது. இந்த திருவண்ணாமலை கோவிலுக்கு பின்பு இருக்கும் மலை சிவனின் அம்சமாக கருதி வழிபட படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்திருவிழா இக்கோவிலில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்த திருவண்ணாமலை அருணாச்சல மலையுச்சியில், ஒரு மிகப்பெரிய இரும்பு கோப்பையில்,3 டன் நெய்யை ஊற்றி பல கிலோ எடைகொண்ட துணிகளால் திரி போட்டு ஏற்ற படும் தீபம், நெடுந்தொலைவில் இருப்பவர்களும் தரிசிக்க கூடிய வகையில் இருக்கும்.                                                                                                                                                                              
                            இத்தீபம் அக்கோப்பையில் உள்ள நெய் தீரும் வரை இரவு, பகல் பாராமல் எரிந்து கொண்டே இருக்கும். இந்த திருவண்ணாமலை தமிழ் சித்தர்களில் ஒருவரான “இடைக்காடர்” சமாதி அடைந்த தலம் ஆகும். இந்த மலையிலும், மலையை ஒட்டிய காட்டுப்பகுதிகளில் இன்றும் பல்வேறு சித்தர்கள் பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. அக்காலம் தொட்டு இக்காலம் வரை பல சித்தர்கள், ஞானிகளை ஈர்க்கும் தலமாக திருவண்ணாமலை கோவில் விளங்குகிறது.      

                                                                                         
                          இந்த மலையின் அடிவாரத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து தனது சித்துக்கள் மூலம் மக்களுக்கு பல நன்மைகளை செய்த “சேஷாத்திரி சுவாமிகள்” சமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது, அதன் அருகிலேயே தனது வாழ்நாளில் அதிகம் பேசாமல் தனது கருணை கொண்ட பார்வையாலேயே அனைவருக்கும் மவுன தீட்சை அளித்த “ரமண மகரிஷியின்” ஆசிரமமும், அவரது சமாதியும் அமைந்துள்ளது.  திருவண்ணாமலை தல சிறப்பு இந்த திருவண்ணாமலை கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகும். சித்தர்களில் ஆதிசித்தனாகிய சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் சித்தர்கள் அருவமாக வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு பௌர்ணமி இரவன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர்.        

                                                                                                                                                                 
                           இந்த திருவண்ணாமலை கோவிலை கிரிவலம் வரும் வழியில் “இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நைருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம்” என “அஷ்டதிக் பாலகர்கள்” எனப்படும் எட்டு திசைகளின் அதிபதிகள் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம் உள்ள கோவில்கள் இருக்கின்றன. இந்த அஷ்ட லிங்கங்களையும் வழிபடுவதால் நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.            இந்த கிரிவழிப்பாதையிலேயே “இடுக்கு பிள்ளையார்” கோவில் இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் ஒரு மண்டபத்தில் இருக்கும் சிறிய இடுக்கின் வழியாக உள்ளே நுழைந்து, முன்பக்கமாக வெளியில் வந்து விநாயகரை வேண்டிக்கொள்வதால் குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது திடமான நம்பிக்கை ஆகும். பில்லி சூனிய பாதிப்புகள், மனநல பிரச்சனைகள் இன்ன பிற பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.      “சித்ரா பௌர்ணமி” தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து, அண்ணாமலையரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து வணங்குபவர்களுக்கு குல சாபங்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்பது திண்ணம் என கூறுகிறார்கள்.                

                                       
                            இதற்கு சான்றாக அன்றைய தினத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவதை காண முடியும். “கார்த்திகை தீபம்” திருவிழா இக்கோவிலில் 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் இறுதி நாளன்று மாலை 6 மணிக்கு மேல் ஆலயத்தின் இறைவன் மற்றும் இறைவிக்கும் பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, கோவிலில் இருந்தவாறே மலையுச்சியில் இருப்பவர்களுக்கு சைகை மூலம் தீபத்தை ஏற்றுவதற்கு தகவல் தெரிவிக்கபட்டு மலைமீது 3 டன் அளவு நெய், மற்றும் பல கிலோ எடையில் காடா துணியால் செய்யப்பட்ட திரியில் கற்பூரம் கொளுத்தி, தீபம் ஏற்றபடுகிறது.       இந்த தீபத்தின் ஒளியை 30 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் வாழும் மக்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவானவன், அவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதை இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம் ஆகும்.      

                                                                                               
                          இந்த கார்த்திகை தீப தரிசனத்தை காண்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் அண்ணாமலையார் மற்றும் இங்கு அருவமாக வாழும் சித்தர்களின் ஆசிகளால் நிறைவேறும். கோவில் அமைவிடம் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு செல்ல தமிழகம் மற்றும் புதுவையிலிருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *