மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக, மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பல்வேறு தீ வைப்பு சம்பவங்களும், கலவரங்களும் நடைபெற்று வரும் நிலையில்,
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே பகுதிகளில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தமிழர்கள் படும் அல்லலைப் போக்குவதற்கும், அவர்களை மீட்பதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் அவதியுறும் தமிழர்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை முதலமைச்சருக்கு அதிகாரிகள் தெரிவிக்கவில்லையா என்றும், மணிப்பூர் வாழ் தமிழர்கள், தமிழர்கள் இல்லை என முதல்வர் முக.ஸ்டாலின் நினைத்துவிட்டாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில், தங்கள் குடும்ப மக்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திமுக அரசு செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் நம் சகோதர தமிழர்களின் உறவுகளைக் காக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.