வாழ்க்கையில் நீங்கள் எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும் சரி. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதுதான் உண்மை.உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் 12 சதவீதம் பேர்தான் உடல் வலி இல்லாத, மருத்துவச் செலவு இல்லாத, நல்ல சாவோடு போய்ச் சேருகிறார்கள். அப்படியானால் மீதமுள்ள 88 சதம் பேர்..? 7 சதவீதம் பேர் புற்று நோயாலும், 26 சதவீதம் பேர் இதய நோயாலும், 2 சதவீதம் பேர் நீரிழிவு நோயாலும், 13 சதவீதம் பேர் நுரையீரல் நோய்களாலும்,28 சதவீதம் பேர் தொற்று நோய்களாலும், 12 சதவீதம் பேர் காயங்களாலும் மரணிக்கிறார்கள்.
இதில் வேதனையான விசயம் என்ன தெரியுமா? ஆண்டுக்கு சுமார் 6 கோடியே 30 லட்சம் பேர் தங்களது கடைசி காலத்தில் போதிய மருத்துவச் செலவு செய்ய முடியாமல் மாண்டு போகிறார்கள் என்பதுதான். இது தவிர இந்தியாவில் 70 சதவீதம் பேர் போதிய மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வதில்லை என்பதும் வேதனை கலந்த அதிர்ச்சித் தகவல்தான்.
சீனச் சந்தையில் ஒருவருக்கு சாதாரணமாகத் தோன்றிய “கொரானா” வைரஸ் கிருமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஒட்டு மொத்த உலகையே ஆட்டுவித்து கொண்டும், பீதியில் உறைய வைத்துக் கொண்டும் இருக்கிறது. மக்கள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.
உங்களுக்கு தெரியுமா? புதிய, புதிய நோய்களால் தாக்கப்பட்டு, போதிய மருத்துவம் இல்லாமல் இந்தியாவில் மரணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்பால் அரசாங்கங்கள் தக்க கவனம் செலுத்தாமல் என்னவோ ‘கொரானா’வை மட்டும் பெரிதாக வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள்தொகையில் 1,000 பேரில் ஒருவரையோ அதற்கும் குறைவானவர்களையோ பாதிக்கும் நோய்களை “அரிய நோய்கள்’ என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நோய்களுடன் 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்இதில் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் உலக அளவில் அரிய நோய்களாகக் சொல்லப்படுவதில் 450 நோய்கள் இந்திய மருத்துவமனைகளில் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே ‘மிக திடகாத்திரமானவர்கள்’ எனப் பெயரெடுத்த இந்தியர்கள் சமீப காலமாக உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் அதிகம் சந்திக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இதற்கு காரணம் இந்தியர்களின் உடலில் ‘வைட்டமின் பி 12’ குறைபாடு பெருகி வருவது எனச் சொல்லப் படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, 10 இந்தியர்களில் 8 பேர் வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்கள் என்று தெரிவித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
இதற்கடுத்தபடியாக வெளி வந்திருக்கும் மற்றொரு அதிர்ச்சித் தகவல் இது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவற்றில் 23 சதவீத மாதிரிகளில் கந்தகம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் கந்தக நச்சால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.. கந்தக நச்சால் வளரும் குழந்தைகளுக்கு ‘ஐக்யூ’ பாதிக்கப்படும், கந்தக நச்சின் அளவு அதிகமானால் மூளை மற்றும் நரம்பு பாதிப்பு ஏற்படுவதுடன் ‘கோமா மரணம்’ கூட ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதே போல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 70 ஆயிரம் பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள் என்றும் ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேருக்கு புதிய வகை பக்கவாதம் ஏற்படுகிறது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உடல் பருமனால் இதய நோய் ஏற்படும் அபாயம் 23 சதவீதம் உள்ளது. இந்தியாவில் உடல் பருமனால் அவதிப்படுவோர் 30 லட்சம் பேர் உள்ளனர்.
இது போல் ஆட்டிசம்,புற்று நோய், சர்க்கரை வியாதி, கிட்னி பிரச்சனை, மூளைச்சாவு என ஏராளமான நோய்களுக்கு மருத்துவம் கண்டறியப்படாத நிலையில் எண்ணற்ற உயிர்கள் வெளியே சொல்லப்படாமல் நாள் தோறும் ‘நரகலோகம்’ சென்று கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் இவற்றிற்கு என்று தீர்வு காணும்..? விடை தெரியவில்லை?
விடாது கருப்பு’ போல மனித உடலின் மர்மங்கள்
சினிமாக்களிலும், தொலைக்காட்சிகளிலும் இயக்குனர்கள் ‘கிராபிக்ஸ்’ காட்சிகளால் நம்மை அதிர வைப்பார்கள்.ஆனால் அதை விடவும் பயங்கரமான காட்சிகள் நமது ஒவ்வொருவர் உடம்பிலுமே இருக்கிறது. இந்த மனித உடல் வெறும் எலும்பும் தோலும்தான் என்று கருதாதீர்கள். இந்த சரீரத்திற்குள் ஏராளமான ரகசிய சூட்சுமங்களை இறைவன் வைத்துள்ளான்.
ஒருவர் செத்துப் போனதும்.. அவ்வளவுதான்..’போய்ச் சேர்ந்து விட்டான்’ என்றுதானே நினைக்கிறீர்கள்.இல்லை. போனது அவனது மூச்சுக் காற்று மட்டும்தான்..செத்த உடலின் தசைகள் மேலும் ஒரு மணி நேரம் இயங்கிக் கொண்டிருக்கும்.செத்தவரின் ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை வேலை செய்யும். எலும்புகள் 4 நாட்களை வரை செயல்படும். கண்ணும் அவனது காதும்,சிறுநீரகமும் தொடர்ந்து 6 மணி நேரம் இயங்கிக் கொண்டே இருக்கும்.
எல்லோருக்கும் தலா ஒரு ஜோடி கால்கள், கைகள்..கண்கள், காதுகள் கொடுத்திருக்கிறான் இறைவன். ஆனால் இவை இரண்டும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஒரு கைக்கும், இன்னொரு கைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கும்.இது போல் கண், காது, கால் என இவை அனைத்துமே ஒன்று சிறியதாக இன்னொன்று பெரியதாக இருக்கும். கருவிலேயே இந்த உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லையாம்.
ஒரு மனிதனின் உயரத்தை பகலில் அளந்து பார்த்தால் குறைவாகவும் இரவில் அளந்து பார்த்தால் உயரம் கூடுதலாகவும் இருப்பான்.ஒவ்வொரு மனிதனும் பகலில் 8 மி.மீ உயரம் சுருங்கி இரவில் 8 மி.மீ உயர்கிறான். காரணம் பகலில் வேலை செய்யும்போது தண்டு வடக் குறுத்தெலும்பு ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் விறைப்புத் தன்மை இல்லாமல் நெடுஞ்சான் கிடையாக படுத்து உறங்குவதால் உடம்பின் உயரம் கூடுகிறது.
மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணர முடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளைதான். பெண்களைவிட ஆண்களின் மூளை பெரியது. பெண்களை விட சுமார் 4 ஆயிரம் அதிக உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது. நமது சிறு நீரகம் ஒரே ஒரு வடிகட்டியால் ஆனதல்ல. அதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. நமது உடலில் உள்ள ரத்தம் முதன் முதலாக இதயத்திலிருந்துதான் புறப்படுகிறது. இந்த ரத்தம் 30 வினாடிகளில் உடல்முழுவதும் சுற்றி மீண்டும் இதயத்திற்கு வந்து சேர்ந்து விடும்.உங்கள் இதயம் என்ன அளவு இருக்கும் தெரியுமா? அவரவர் கைவிரல்கள் அனைத்தையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவுதான் அவரவர் இதயமும் இருக்கும்…
ஒவ்வொரு மனித முகமும் வெவ்வேறுதான். ஆனால் ஒட்டு மொத்த உலக மனிதர்களின் முகங்களை 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம் என்பதுதான் உண்மை.
உயிரோடு விளையாட்டு கொரோனா மட்டுமல்ல.. புதிய நோய்களால்‘வெளியே தெரியாமல் நிகழும் மரணங்கள்’
Advertisements