பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய தமிழ் நடிகை!

Advertisements

16 வயதினிலே படத்தின் தெலுங்கு ரீமேக் படஹரல்லா வயசு படத்தை எடுத்த ராகவேந்திரா ராவுக்கு எப்படியும் ஸ்ரீதேவியை வைத்து இந்தியில் ஒரு வெற்றிப் படத்தை எடுக்க வேண்டும் என்ற தாகம் இருந்தது.

இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதேவிக்கு ஆரம்பத்தில் இந்தி என்றாலே வேப்பங்காயாகக் கசந்தது. ஈடுபாடு இல்லாமல் தனது முதல் இந்திப் படத்தில் நடித்த அவர் இந்தியின் ஸ்டார் நடிகையாக மாறியதே ஒரு சுவாரஸ்யமான கதைதான்.

1963 இல் பிறந்த ஸ்ரீதேவி 1967 இல் தனது நான்காவது வயதில் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் கந்தன் கருணை.

ஏ.பி.நாகராஜன் முருகனின் ஆறுபடை வீடுகளை மையப்படுத்தி எடுத்த இந்தப் படத்தில் முருகனாகச் சிவகுமாரும், முருகனின் முதல் மனைவி தெய்வானையாகக் கே.ஆர்.விஜயாவும், இரண்டாவது மனைவி வள்ளியாக ஜெயலலிதாவும், சிவனாக ஜெமினி கணேசனும், பார்வதியாகச் சாவித்ரியும், முருகனின் படைத்தலைவர் வீரபாகுவாகச் சிவாஜி கணேசனும் நடித்திருந்தனர்.

குழந்தை முருகனாக ஸ்ரீதேவி நடித்தார்.ஸ்ரீதேவி நாயகியாக நடித்த முதல் படம் மூன்று முடிச்சு. 1976 ல் அவரது 13 வது வயதில் வெளியானது. கமல், ரஜினி நடிக்கப் பாலசந்தர் இயக்கினார்.

அடுத்த வருடம் வெளியான 16 வயதினிலே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கடுத்த வருடம் கமலுடன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் வெளியானது. தொடர்ந்து இரண்டு சில்வர் ஜுப்லி படங்கள்.

15 வயதில் இந்தப் புகழும், விளம்பர வெளிச்சமும் பெரிது. 16 வயதினிலே படத்தைத் தெலுங்கில் ராகவேந்திர ராவ் படஹரல்லா வயசு என்ற பெயரில் இயக்கியபோது ஸ்ரீதேவியையே நாயகியாக நடிக்க வைத்தார்.

கமல் நடித்த வேடத்தில் சந்திரமோகன் நடித்தார். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து பாரதிராஜா 16 வயதினிலே படத்தை இந்தியில் ரீமேக் செய்தபோது ஸ்ரீதேவிக்கு அதில் நடிக்கத் துளியும் விருப்பமில்லை.

ஒரே கதாபாத்திரத்தை எத்தனை முறை நடிப்பது என அவரது மனம் சலித்துப் போயிருந்தது. ஆனால், பாரதிராஜாவிடம் சொல்லவும் துணிச்சலில்லை.

விருப்பம் இல்லாமல்தான் அவர் மும்பைக்கு விமானம் ஏறினார். இந்தியில் Solva Sawan என்ற பெயரில் 16 வயதினிலே ரீமேக் செய்யப்பட்டது. அங்கேயுள்ள கலாசாரத்துக்கு ஏற்றபடி ஸ்ரீதேவியின் காஸ்ட்யூம்கள் மாறின.

ஆனால் அதே நடிப்பு, அதே சிரிப்பு, அதே அழுகை. முதல்நாள் முதல் காட்சியை ஸ்ரீதேவி ஏகத்துக்கும் சொதப்பி வைத்தார். அவருக்கு இந்தி உச்சரிப்பும் சரியாக வரவில்லை.

எதற்கு இந்தப் படத்தில் நடித்தோம் என்ற கசப்புடனேயே படத்தை முடித்துக் கொடுத்தார். இதில் நாயகனாக நடித்த அமல் பலேகர் அன்று முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் இருந்தவர்.

இந்த இடத்தில் இன்னொன்றை சொல்ல வேண்டும். 16 வயதினிலே படத்தின் ரீமேக்கான Solva Sawan ஸ்ரீதேவியின் முதல் படம் கிடையாது. அதற்கு முன் ஜுலி என்ற படத்தில் 1975 இல் நடித்திருந்தார்.

மலையாளத்தின் முன்னணி நாவலாசிரியர் பம்மன் எழுதிய நாவலைத் தழுவிச் சேதுமாதவன் இயக்கிய சட்டக்காரி படத்தின் இந்தி ரீமேக்தான் ஜுலி. சட்டக்காரியில் நடித்த லட்சுமியையே ஜுலியில் நடிக்க வைத்தார்.

அதுதான் லட்சுமியின் முதல் இந்திப் படம். இதில் லட்சுமியின் தங்கையாகச் சின்ன வேடம் ஒன்றில் ஸ்ரீதேவி நடித்தார். அவருக்கும் அதுதான் முதல் இந்திப் படம். நாயகியாக முதல் படம் Solva Sawan.

ஆனால் அது தோல்வி. 16 வயதினிலே படத்தின் தெலுங்கு ரீமேக் படஹரல்லா வயசு படத்தை எடுத்த ராகவேந்திரா ராவுக்கு எப்படியும் ஸ்ரீதேவியை வைத்து இந்தியில் ஒரு வெற்றிப் படத்தை எடுக்க வேண்டும் என்ற தாகம் இருந்தது.

அவர் ஏற்கெனவே ஸ்ரீதேவியை வைத்துத் தெலுங்கில் சில படங்கள் இயக்கியிருந்தார். 1983 இல் அவரது இயக்கத்தில் இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் ஸ்ரீதேவி நடித்தார்.

நாயகியாக அவரது இரண்டாவது இந்திப் படம். ஜிதேந்திரா ஹீரோ. தெலுங்கில் கிருஷ்ணா, ஜெயப்ரதாவை வைத்து எடுத்த தனது படத்தையே இந்தியில் ஹிம்மத்வாலா என்ற பெயரில் ராகவேந்திர ராவ் இயக்கியிருந்தார்.

படம் பம்பர் ஹிட் ஆனதுடன் 1980களில் அதிகம் வசூலித்த இந்திப் படம் என்ற சாதனையும் படைத்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கில் நடிக்க முடியாத அளவுக்கு இந்தியிலிருந்து வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கு குவிந்தன.

குறுகிய காலத்தில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகப் பரிணமித்தார். அவரது சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த வேடங்களைத் தமிழில் செய்துள்ளார். அதுவும் இந்தியில் நடிப்பதற்கு முன்.

அதுகுறித்து இந்திப்பட ரசிகர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஸ்ரீதேவி தங்களுக்காகவே அனுப்பப்பட்ட பாலிவுட் நடிகை என்றே இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

விருப்பம் இல்லாமல் மும்பைக்கு விமானம் ஏறியவர் பாலிவுட்டின் கனவுக்கன்னியானது சினிமா கதையைவிடவும் சுவாரஸயமானது.

தமிழகத்திலிருந்து பாலிவுட் சென்று கோலோச்சிய ஸ்ரீதேவி, கபூர் குடும்பத்தைச் சேர்ந்த போனி கபூரை திருமணம் செய்தார். போனி கபூர் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்.

கபூர் குடும்பமே, பாலிவுட்டில் மிகப்பெரிய குடும்பம். கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பலர் நடிகர்களாக உள்ளனர். ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியின் இரண்டு மகள்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், போனி கபூரை திருமணம் செய்யும் முன் அவரின் சகோதரர் உடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். போனி கபூருக்கு அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

இரண்டு பேருமே பிரபல நடிகர்கள். இவர்களின் வாரிசுகளும் நடிகர்களாக உள்ளனர். அந்த வகையில் ஸ்ரீதேவி, அனில் கபூருக்கு ஜோடியாக 14 படங்களில் நடித்துள்ளார்.

‘ஹீர் ரஞ்சா’, ‘லாம்ஹே’, ‘மிஸ்டர். இந்தியா’, ‘மிஸ்டர். பெச்சாரா’, ‘ஜபாஞ்ச்’, ‘கர்மா’, ‘லாட்லா’, ‘ஜூடாய்’, ‘சோனே பர் சுஹாகா’, ‘ஜோஷிலா’, ‘ராம் அவதார்’, ‘ரூப் கி ராணி சோரோன் கா ராஜா’ மற்றும் ‘ஆஸ்மான் சே கிரா’ ஆகிய படங்களில் அனில் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

இதில், 10 படங்கள் மெகா ஹிட் திரைப்படங்கள். இதனால், இந்த ஜோடி பாலிவுட்டின் வெற்றி ஜோடியாகக் கருதப்பட்டது. இதில் சில படங்களுக்குத் தயாரிப்பாளர் போனி கபூர் தான்.

அதிலும், ‘ஜூடாய்’ என்கிற படம், ரூ. 6.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 48 கோடிக்கு மேல் வசூலித்தது. அதுவும், 1997ம் ஆண்டே. வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படம் 1997 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *