வெயிலில் கருமையாகும்  சருமம் – அதற்கான தீர்வுகள்..!

Advertisements

சூரிய ஒளி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பது சருமத்துக்கு கெடுதலை உண்டாக்கும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் ‘மெலனின்’ எனும் நிறமியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் சருமத்தின் நிறம் மாறி கருமை அடையும். தவிர்க்க முடியாத காரணங்களால், வெயிலில் வெளியே செல்பவர்களின் சருமம் இவ்வாறு கறுத்துப் போக நேரிடும். இந்த கருமை தானாகவே மறைந்து சருமம் மீண்டும் பழைய நிலையை அடையும். இதற்கு 27 முதல் 30 நாட்கள் வரை ஆகும். அதேசமயம் சூரிய ஒளியால் எவ்வளவு ஆழமாக சருமம் பாதிக்கப்பட்டு கருமை அடைந்திருக்கிறது என்பதை பொறுத்து இந்த செயல்பாடு தாமதமாகலாம். இயற்கையான முறையில் கருமையை போக்கி, சருமத்தை மீண்டும் பொலிவாக்குவதற்கு உதவும் குறிப்புகள் இங்கே வெயில் காலங்களில் காலை, மாலை என இரு வேளையும் குளிர்ந்த நீரில் குளித்துவந்தால் சருமம் புத்துணர்வு பெறும். வெயிலில், வெளியில் சென்று வந்த பின்னர் முகம், கழுத்து, கை மற்றும் கால்களை குளிர்ந்த நீரில் கழுவலாம். அதன் மூலம் வெயிலால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் குறையும். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

Advertisements

தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்ல நேர்ந்தால் வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடர் நிறங்கள் வெப்பத்தைக் கவர்ந்திழுக்கும். ஆகவே, கோடை காலங்களில் வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.  எலுமிச்சம்பழச் சாறு மற்றும் தேன் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால், வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும். கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள் இரண்டையும் ரோஜா பன்னீர் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். தக்காளி சாற்றை, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்தால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும். சந்தனம், தயிர் இவை இரண்டையும் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவவும். அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் ஜொலிக்கும்.

தேங்காய்ப்பாலுடன் சந்தனம் கலந்து முகத்தில் மென்மையாக தேய்த்தால் கருமை நீங்கி சருமம் பளிச்சிடும். சற்றே புளித்த தயிரை சிறிதளவு எடுத்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் சருமம் மீண்டும் பொலிவடையும். எலுமிச்சம்பழச் சாறு சிறிதளவு எடுத்து அதனுடன் சமபங்கு தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம். நன்றாக பழுத்த பப்பாளி பழத்துடன், சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். இந்தக் கலவை வெயிலால் ஏற்பட்ட கருமையை நீக்கி சருமத்தை பளிச்சிட செய்யும்.           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *