ராகுல் காந்தியின் புதிய பாஸ்போர்ட் மனுவுக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது தூதரக அந்தஸ்திலான பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில், ஒரு பொதுமுறையான புதிய பாஸ்போர்ட் பெருவதற்காக டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் தடையில்லா உத்தரவை வழங்க வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது , முன்னாள் எம்.பி. மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்தார் . முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினால், அது நேசனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடும் என சுப்பிரமணிய சுவாமி நேரில் ஆஜராகி கூறினார். எனினும், இந்த வழக்கு 2018-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ளது என்றும், அவர் வெளிநாட்டுக்கு பயணம் செய்து வருகிறார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் ராகுல் காந்தியின் வழக்கறிஞர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்த நிலையில், இந்த விவகாரத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்யும்படி முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது. மேலும் வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.