உடலின் உள் உறுப்புகள் சீராக இயங்க மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம், கொழுப்பு,
தாதுப்பொருட்களான கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், அயோடின், சோடியம்,
பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, தாமிரம், புளோரின் உள்பட பல்வேறு சத்துக்கள்
தேவை. நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் போதிய அளவில் இருக்க வேண்டும்.
ஆனால், இன்றைக்கு கிடைக்கும் ஒட்டுரக தீட்டப்பட்ட வெள்ளை அரிசியில் சத்துப்
பொருட்கள் போதுமானதாக இல்லை. இதனை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்து
பற்றாக்குறை ஏற்படுவதுடன் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. தொடர்ந்து
சத்தற்ற இதுபோன்ற அரிசியை உண்பதால் இதயம், மூளை, சிறுநீரகம், கணையம்,
மண்ணீரல், கல்லீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் அதன் வேலை செய்யும்
ஆற்றலை இழந்து, மாரடைப்பு உள்பட பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவ
துறையினர் எச்சரிக்கிறார்கள்.
தமிழக சந்தையில் 1970-களில் தீட்டப்பட்ட நவீன ஒட்டு ரக அரிசி ரகங்கள் அறிமுகம்
செய்யப்பட்டன. இந்த ஒட்டு ரக அரிசி என்பது, நெல்லாக இருந்து அரிசியாக
மாற்றப்படும்போது பிளீச்சிங், சில்க்கி பாலிசிங், ஒயிட்டிங் என்ற எந்திர
செயல்முறையில் தீட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
இதனால், அரிசியில் இருக்கும் பெரும்பாலான சத்துக்கள் நீக்கப்படுகின்றன.
தற்போது, கடைகளில் அரிசி என்று நாம் வாங்கி உண்பது பெரும்பாலும் எந்த சத்தும்
இல்லாத மாவுச்சத்து மட்டுமே சத்துக்கள் நீக்கிய வெள்ளை அரிசியைத்தான்நாம்
சமைத்து சாப்பிடுகிறோம்.. மனித உடலுக்கு வரும் நோய்களில், 70 சதவீதத்துக்கும்
மேலானவை ஊட்டச்சத்து பற்றாக்குறை சார்ந்த நோய்கள் இதையும்
ஆய்வுத்தகவல்கள்தான் கூறுகின்றன.
அமெரிக்க இதய நோயியல் கல்லூரி விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு
அறிக்கையில், “அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் மாரடைப்பு உள்பட
தீவிரமான நோய்களால் ஏற்படும் மரணங்களுக்கு தீட்டப்பட்ட தானியங்களை மக்கள்
அதிக அளவில் உணவாக பயன்படுத்துவதுதான்” என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க இதய நோயியல் கல்லூரியின் ஆய்வு கூறுவதும் இந்த கருத்தைத்தான்.
அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது ஆய்வில் கண்டுபிடித்ததை தமிழர்கள் 2 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்திருந்தனர். “உணவே மருந்து, மருந்தே உணவு’
-என்ற விதியை கடைப்பிடித்தனர். தங்களின் பிரதான உணவான நாட்டு ரக
கைக்குத்தல் அரிசியைத்தான், உடலுக்கு நோய் அண்டாமல் இருக்கவும், நோய்
வந்தால் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர். 1,066 வகை அரிசி ரகங்கள் உலகின்
வேறு எந்த இனமும், எந்த வேளாண் பல்கலைக்கழகமும் கண்டறிய முடியாத அரிசி
ரகங்கள் அவை.
புற்றுநோய் வராமல் இருக்க கருப்புக்கவுனி, உடல் வலிமைக்கு மாப்பிள்ளை சம்பா,
மூளை நரம்புகள் வலுப்பெற காலா நமக், வேறு சில நோய்கள் குணமாக
கருங்குறுவை, இதயத்தை பலமாக்கும் தங்க சம்பா என்று அதிசயமான மருத்துவ
குணங்கள் நிறைந்த 1,066 வகை அரிசி ரகங்களை தமிழர்கள் பயிரிட்டு வந்ததாக
சொல்கிறார்கள். இந்த அரிசிகளில் இருக்கும் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடைக்கும் தானியங்களில் இருக்காது என்பதை
நம்முன்னோர் ஆருடமாக கணித்து இருக்கிறார்கள்.
தமிழக பாரம்பரிய அரிசி ரகங்களில் பெரும்பாலானவை காலப்போக்கில்
மறைந்துவிட்டன. இருந்தாலும் இந்த அரிசி ரகங்களை பாதுகாக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் செயல்பட்ட மறைந்த நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரால் சில
பாரம்பரிய அரிசி ரகங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக
கூறுகிறார்கள். “உன் மண்ணில் விளையாத எதுவும் உனக்கான உணவு அல்ல”
என்றார், நம்மாழ்வார்.
அந்த வகையில், நம் முன்னோர் கண்டறிந்த பாரம்பரிய அரிசி ரகங்கள்தான் இந்த
மண்ணின் மக்களின் உணவாக இருக்க முடியும். எதிர்கால தலைமுறை உடலும்
உள்ளமும் வலுவானதாக உருவாக வேண்டுமென்றால், சத்தற்ற நவீன ஒட்டுரக
வெள்ளை அரிசியை கைவிட்டு, எண்ணில்அடங்கா சத்துக்கள் நிறைந்த தீட்டப்படாத
மரபு சார்ந்த நாட்டு வெள்ளை அரிசிகளையும், மரபு சிவப்பு அரிசி ரகங்களையும்
மட்டுமே உணவாக உண்பதுதான் வழி என்கிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள்.