உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23ம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 1,891 கோடியில் ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏ.சி. உற்பத்தி ஆலைக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஏர் கன்டிசனர் மற்றும் கம்பரசர் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற விழாவில் நேற்று அடிக்கல் நாட்டி பேசியதாவது: 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23ம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன். இந்த நிலையில் மிக ஸ்மார்ட்டாக, முன்கூட்டியே ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனத்தை வைத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்னணுவியல் துறையில் உலகளாவிய மின்னணு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் காற்றழுத்த திட்ட உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை திருவள்ளூர், மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெருவயல் கிராமத்தில் ரூ. 1,891 கோடியில் முதலீடு மற்றும் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த உற்பத்தியில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் 60 சதவீதத்திற்கும் மேல் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது