சென்னையில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது பழைய சிலிண்டர்களையும், துருபிடித்த சிலிண்டர்களையும் மாற்றும் நடவடிக்கையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டது. அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் போதுமான அளவுக்கு புதிய சிலிண்டர்கள் வராததால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
சென்னையில் வழக்கமாக முன்பதிவு செய்த ஓரிரு நாளில் கியாஸ் சிலிண்டர் கிடைத்து விடும். ஆனால் தற்போது 8 நாட்கள் ஆகிறது. இதையடுத்து சென்னையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க பக்கத்து மாநிலங்களில் இருந்து வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கியாஸ் சிலிண்டர் கொண்டு வரப்படுகிறது.
தேவைக்கு ஏற்ப தினமும் 100 லாரிகளில் சிலிண்டர் சென்னைக்கு வருகிறது. ஒவ்வொரு லாரியிலும் 366 சிலிண்டர்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, மயிலாடுதுறை, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் இருந்தும் தினமும் 124 லாரிகளில் சிலிண்டர்கள் வருகிறது. இதன் காரணமாக தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு குறைந்து வருகிறது. இப்போது சென்னையில் முன்பதிவு செய்த 5 நாட்களில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. சென்னை நகருக்கு தினமும் 45 ஆயிரம் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. இதை சரி செய்ய 1.25 லட்சம் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட உள்ளன.