சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில், சென்னை மாநகராட்சி ஆணையர் .ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகராட்சியின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைத்தல், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ மைனிங் திட்டத்தை செயல்படுத்தும் பணி, மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலப்பணிகள், சாலைப்பணிகள் ஆகியனவற்றை விரைந்து முடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகளான நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், சிங்காரச் சென்னை 2.0, சாலைகள் மற்றும் நடை பாதைகளை சீரமைத்தல், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைத்தல், சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துதல், புதிய பூங்காக்கள் அமைத்தல், மயான பூமிகளை மேம்படுத்துதல் மற்றும் மாநகரை பசுமையுடன் பராமரிக்க மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.