
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு டெல்லி முதல் சண்டிகர் வரை லாரியில் பயணம் செய்து ஓட்டுனர்களின் குறைகளை கேட்டறிந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி லாரியில் பயணம் செய்யும் வீடியோக்களும், போட்டோக்களும் நேற்று முன்தினம் இரவு திடீரென சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் தனது வழக்கமான வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து லாரியில் ஓட்டுனரில் அருகில் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தி டெல்லி முதல் சண்டிகர் வரை லாரியில் பயணம் செய்து, ஓட்டுனரின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சாலையோர தாபாவில் அமர்ந்து லாரி ஓட்டுனர்களுடன் ராகுல் உரையாடினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பதிவில், ‘‘மக்களின் தலைவர் ராகுல்காந்தி லாரி ஓட்டுனர்களுடன் பயணம் செய்து அவர்களின் பிரச்னைகளை அறிந்து கொண்டார். டெல்லியில் இருந்து சண்டிகர் வரை அவர் லாரியில் பயணம் செய்தார். ஊடக செய்திகளின்படி இந்திய சாலைகளில் சுமார் 90 லட்சம் லாரி ஓட்டுனர்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் மன் கி பாத் ( மனதின் குரல்) கேட்கும் பணியை ராகுல் காந்தி செய்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று அதிகலை அம்பாலா- சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குருத்வாராவில் அவர் வழிபாடு செய்தார்.
ராகுலின் தாயாரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியாகாந்தி சிம்லாவில் இருப்பதாகவும், அவரை சந்திப்பதற்காக சென்ற ராகுல் வழியில் லாரி ஓட்டுனர்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
