R. Sarathkumar: சரத்குமார் மந்திரி ஆகிறாரா? பரபரக்கும் அரசியல் களம்!

Advertisements

சினிமாவில் வரும் திரில்லிங் காட்சி போலவே யாரும் எதிர்பாராத வகையில் பாரதிய ஜனதா கட்சியோடு தனது சமத்துவ மக்கள் கட்சியை ஒன்றாக இணைத்து அறிவித்திருக்கிறார் நடிகரும் அதன் தலைவருமான சரத்குமார்.

இதன் பின்னணியில் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து நமது ஜெம் தொலைக்காட்சி அலசி ஆராய்ந்தபோது பல பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

சரத்குமார் தனது சினிமா வாழ்க்கையோடு அரசியல் களத்திலும் இறங்கிய‌போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார்.பிறகு அதிமுகவில் இணைந்தார். இதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகிச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.

தேர்தலுக்கு முன்பாகத் தனித்து தான் போட்டியிடுகிறோம் என்று பேசுவார். ஆனால் கடைசியில் அதிமுகவில் தான் அவர் கூட்டணி சேருவார்.

அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துசமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது. சரத்குமார் 2011 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். ஆனால் 2016 ஆம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதாகச் சமீபத்தில் அறிவித்தார். சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக ஒரு மாதத்திற்கு முன்பே நமது ஜெம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி அமைத்த சரத்குமார் திடீரெனத் தனது கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்து விட்டார்.

வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம். பாடுபடுவோம் வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் பாஜகவில் தனது கட்சியை இணைத்துள்ளதாகச் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்ததை அவரது தொண்டர்களில் பெரும்பாலான பேர் விரும்பவில்லை. சரத்குமார் தனது கட்சியைப் பாஜகவுடன் இணைத்த மேடையிலேயே பல தொண்டர்கள் “நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு” என்ற குரல் எழுப்பினார்கள்.

பாரதிய ஜனதா கட்சியுடன் சமககவை இணைக்கும்போது  தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாலா கைகட்டி நிற்க வேண்டிய நிலை வரும் என்று சமத்துவ மக்கள் கட்சியினர் வேதனைப்படுகிறார்கள்.

இதற்கிடையே சரத்குமார் எதற்காகப் பாரதிய ஜனதா கட்சியுடன் தனது கட்சியை இணைத்தார் என்பது பற்றிய சில தகவல்கள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இது தொடர்பாக நமது டெல்லி நிருபர் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாகவே சரத்குமாரிடம் கட்சியை நடத்துவதற்கு போதுமான பண வசதி இல்லை. தற்பொழுது அவர் பண பிரச்சனையில் இருக்கிறார் எனவே கட்சியைத் தொடர்ந்து வழி நடத்துவதில் அவருக்குப் பல சிரமங்கள் இருந்து வந்தன.

இருந்த போதிலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாமென ஒரு கணக்குப் போட்டு இருந்தார்.
ஆனால் அதைவிட மிகப்பெரிய வாசல் ஒன்று பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அவருக்காகத் திறக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியுடன் இணையுங்கள் ஒரு ராஜசபா எம்பி பதவி உங்களுக்குத் தரப்படும். இதனைத் தொடர்ந்து வருகிற ஆட்சியில் உங்களுக்கு அகில இந்திய அளவில் மிகப்பெரிய பொறுப்பும் மந்திரி பதவியும் தருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் உங்கள் விருப்பப்படி தமிழகத்தில் ஒரு தொகுதி உங்களுக்கு ஒதுக்கித் தரப்படும் என அண்ணாமலை மூலமாகப் பேசப்பட்டது.

இதைத்தான் பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி இணைந்த மேடையில் அண்ணாமலை பேசும்பொழுது சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்கப் பாஜக விரும்பவில்லை அவர் தேசிய அளவில் தேவைப்படுகிறாரெனக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவி தருவதாக டெல்லி பாஜக அழைத்தது இதற்கு அன்புமணி ராமதாஸ் சம்மதித்த போதிலும் மருத்துவர் ராமதாஸ் சமூகம் தெரிவிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் சரத்குமாருக்கு ராஜ்யசபா எம்பி சீட் மந்திரி பதவி கூடவே ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்வது என  வரிசையாகத் தரப்பட்ட வாய்ப்புகள் அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வரவிருக்கும் தேர்தலில் விருதுநகர் அல்லது தென்காசி தொகுதியில் ராதிகாவை போட்டியிட வைக்கலாமென அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

டெல்லி மேலிடத்தைப் பொறுத்த வரையில் சரத்குமாரின் பின்னணி பற்றி ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அவருக்குச் சினிமா ரசிகர்கள் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் ஏராளமான அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயத்தின் வாக்குகள் அவருக்கு அதிக அளவில் இருக்கிறது. இதோடு அவரது பிரச்சாரம் தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தித் தரும் என்றெல்லாம் அந்த ஆய்வறிக்கை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே தேமுதிக மற்றும் பாமகவை எதிர்பார்த்து இருந்த டெல்லி பாஜக மேலிடத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி சேர்வது மிகப்பெரிய அந்தஸ்துதான் எனக்கருதுகிறது.

இதற்கிடையே கட்சியில் இணைந்த உடனே சரத்குமாருக்கு மத்திய மந்திரி பதவியா எனப் பாஜகவினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் சரத்குமாருக்கு விரைவிலேயே அகில இந்திய அளவில் ஒரு பதவி  தரப்படுகிறது என்பது உறுதியான தகவலாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *