அது என்னவோ தெரியவில்லை வடமாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் பாரதிய ஜனதா கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை .பிரதமர் மோடி மீது தமிழகத்து மக்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லை .அவரை ஆதரிப்பதில் ரொம்பவே யோசிக்கிறார்கள். அண்ணாமலையும் எவ்வளவோ குரல் கொடுத்துதான் பார்க்கிறார் . ஆனால் அசைய மாட்டேன் என்கிறார்கள் தமிழர்கள்.
ஒரு மிகப்பெரிய தேசியக் கட்சி தமிழகத்தை பொறுத்தவரையில் மண்ணை கவ்விக் கொண்டுதான் இருக்கிறது . இதே சமயத்தில் பிரதமர் மோடியோ தமிழில் பேச முயற்சி செய்கிறார். தமிழ்நாட்டில் என்னென்ன நடக்கிறது என்பதை எல்லாம் கண்காணிக்கிறார் .தக்க சமயங்களில் தமிழர்களை பாராட்டவும் செய்கிறார் .
பிரதமர் மோடியை பொருத்தவரையில் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மன் கி பாத் என்ற ஒரு உரையை வானொலியில் நிகழ்த்துகிறார்
கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பதவியேற்றது முதல் இதுவரை 100 வானொலி நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார் .இதில் விசேஷம் என்னவென்றால் அவரது 100 மன் கி பாத் உரைகளிலும் அதிகமாக பேசியது தமிழ் மொழி,தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களை பற்றித்தான் என்பது ஒரு முக்கிய செய்தியாகும்.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கும்பொழுது அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் அதிகம் பேசியது ஏன் என்பது தெரியவில்லை?
தமிழ் மொழி பற்றி அவர் பேசும்போது உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் .அந்த தமிழ் நமது பாரத தேசத்தை சேர்ந்தது என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் இந்த புகழ்பெற்ற மொழியை நான் கற்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.
இது மட்டும் இன்றி திருக்குறளின் சிறப்பம்சங்கள் ,சங்க இலக்கியப் பாடல்கள், ஔவையார் பாட்டு போன்றவற்றையும் தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார். வில்லுப்பாட்டு போன்ற கிராமப்புற கலைகளையும் அவர் பாராட்டி இருக்கிறார். தூத்துக்குடியில் பனை மரங்கள் நடுவது போன்ற பெண்களின் செயல்களையும், வேலூரில் நாகை நதியை மீட்டெடுக்க ஒன்று திரண்ட பெண்களையும் பாராட்டி இருக்கிறார்.
மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் என்பவரது மகளின் கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்காக செலவு செய்ததை குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார் .பீடி தொழிலாளி லோகநாதனின் மகள் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதை பாராட்டி இருக்கிறார். தமிழகத்தின் வாழைப்பழங்கள் தஞ்சாவூர் பொம்மை போன்ற புவிசார் பொருட்களை பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழக விவசாயிகளையும் புகழ்ந்து பேசி இருக்கும் அவர் உத்திரமேரூர் கல்வெட்டு வரை ஏராளமான விஷயங்களை தனது மன் கி பாத் உறையில் பேசியிருக்கிறார்.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கும்பொழுது பிரதமர் மோடி தமிழகத்தின் பெருமையை அதிகம் பேசி இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.