
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை நேரில் சந்தித்தார்.
செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பாரிஸ் நகரில் வைத்து அமெரிக்க துணை அதிபரை அவரது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
சந்திப்புகுறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தாருடன் அருமையான சந்திப்பு.
பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் சிறப்பாக உரையாடினோம். அவரது மகன் விவேத் பிறந்த நாளில் அவர்களைச் சந்தித்தது பெருமகிழ்ச்சியை கொடுத்தது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பிரதமர் மோடி கருணை கொண்டவர்.
அவர் அளித்த பரிசுகளால் எங்களது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அருமையான உரையாடலுக்காக அவருக்குக் கடமைப்பட்டுள்ளேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவில் பிரதமர் மோடி, ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உரையாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
