தமிழகத்து புரோட்டா கடைகளும்! முனியாண்டி சாமியும்..!

Advertisements

உலகம் முழுவதும் மைதா மாவுக்கு தடை போட்டிருக்கும் நிலையில், தமிழகத்து மக்களின் மிக ஆசையான இரவுச் சாப்பாடு எதுவென்றால் அது மைதா மாவில் தயாரித்த புரோட்டாதான்…. ஒரு வகை அசைவ ருசிக்கு அடிமையாகி விட்டார்கள் தமிழர்கள் இப்போது….
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இத்தகைய புரோட்டாக்கடைகளின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு உத்தரவு போட்டது யார் தெரியுமா? தெரிந்தோ.. தெரியாமலோ ஒரு கடவுள்தான்…சின்னஞ்சிறிய கிராமத்தில் உள்ள அந்தக் கடவுள், ஒருவரது கனவில் தோன்றியதன் விளைவுதான் இன்றைக்கு தமிழகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான புரோட்டாக் கடைகள் விடிய, விடிய கண் விழித்திருக்கின்றன.
அந்தக் கடவுள் வேறு யாரும் அல்ல..காவல் தெய்வமான முனியப்ப சாமிதான்.. இரவு நேரத்தில் ஊரை வலம் வந்து, மக்களைக் காப்பவராக நம்பப்படும் இவர். மிகவும் துடி கொண்ட தெய்வமாகவும் கருதப்படுகிறார்.
ஊருக்கு ஊர் குடியிருக்கும் இந்த முனியப்பசாமி, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி என்ற கிராமத்திலும் வசிக்கிறார். அந்த ஊர் கண்மாய்க் கரையோரம் வசிக்கும் இவருக்கு சிறிய அளவிலான கோவிலும் இருக்கிறது.
இதே ஊரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ் சுப்பா நாயுடு. மிகவும் வறுமையில் வாடிய. அவரது கனவில் தோன்றினார் முனியப்பசாமி கனவில் வந்த அவர் “அன்னம் விற்று பிழைப்பு நடத்துவாயாக” என்று கூறி விட்டுச் சென்றாராம்.
அதன்படியே சுப்பாநாயுடு காரைக்குடி சென்று அங்கு ஒரு ஓட்டலைத் தொடங்கினார்.. முனியாண்டி விலாஸ் எனத் தமது கடைக்கு பெயரிட்டார். விலாஸ் என்பது அனைத்துத் தரப்பு மக்களும் சங்கமிக்கும் இடம் என்று பொருளாகும்..
1935-ம் ஆண்டில் இந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உதயமானது. முழுக்க,முழுக்க அசைவ ஓட்டல் அது. பிரியாணி, புரோட்டா, ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆப்பாயில், ஆம்லெட் என அவரது வியாபாரம் களை கட்ட ஆரம்பித்தது.
இதற்கு முன்னால் தமிழகத்தில் ஏராளமான பேர் புரோட்டாக் கடைகளைத் தொடங்கினர். ஆனால் அவை பெரிய வெற்றி பெறவில்லை. குறிப்பாக 1925 ஆம் ஆண்டு வாக்கில்’ வெல்லம நாயுடு’ என்பவர் ரங்கவிலாஸ் என்ற பெயரில் அசைவ ஓட்டல் நடத்தியுள்ளார்.தமிழகத்தில் ஓரளவு பிரபலமானது இந்த ஓட்டல்தான்.
சுப்பாநாயுடு கனவில் முனியாண்டி சாமி தோன்றியதையும்,அதன் பிறகு அவர் ஓட்டல் தொடங்கி ஏராளமாக பணம் சம்பாதித்தையும் கேள்விப்பட்ட வடக்கம் பட்டி கிராமத்தினர் பலர் முனியாண்டிக்கு பூஜை, புணஸ்காரம் செய்து அவர்களும் வெளியூர் கிளம்பி இதே பெயரில் முனியாண்டி விலாஸ் என ஓட்டல்களை திறக்க ஆரம்பித்தனர்.இன்றளவும் புதிதாக யார் ஓட்டல் தொடங்கினாலும் இந்த முனியாண்டிக்கு பூஜை போட்டுவிட்டுத்தான் தொடங்குகின்றனர்.
சுப்பா நாயுடுக்கு முனியாண்டி உத்தரவு போட்டு 86 ஆண்டுகள் கடந்து விட்டன…இன்றைக்கு தமிழகத்தில் மட்டும் 1,500 க்கும் மேலான முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் இருக்கின்றன.
தமிழக மக்களிடையே புரோட்டாவும் அசைவ கறி,குழம்பு வகைகளும் பேமசானது இவர்களால்தான். மிகக் குறைந்த விலையில் வாய்க்கு ருசியாக இவர்கள் போட்ட மட்டன் சாப்பாடு பட்டி, தொட்டி எங்கும் பேசும் பொருளாகியது.
மக்கள் மத்தியில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக பின்னாளில் இத்தகைய முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் அனைத்தும் மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் என்ற பெயரில் மாறின. சிவப்பு நிறத்தில் வெள்ளை நிற எழுத்து என்பதையும் முடிவு செய்தனர். இந்த ஓட்டல்களை நடத்தும் அனைவருமே முனியான்டி சாமிக்கு பயந்தவர்கள். எனவே இவர்கள் உணவில் கலப்படம் செய்வதில்லை. ஆட்டுக்கறி என்றால் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கலாம்.,
இவர்கள் முதல் வியாபார பணத்தை முனியாண்டிக்காக ஒரு உண்டியலில் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 3-வது வாரம், அதாவது தைமாதம் 2 வது வெள்ளிக்கிழமை நடக்கும் வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் திருவிழாவிற்காக அந்தப் பணம் நன்கொடையாகத் தரப்படும்.
திருப்பதியில் லட்டு, பழனியில் பஞ்சாமிர்தம் போல இந்த வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் நடக்கும் திருவிழாவில் மட்டன் பிரியாணி போடுவது பேமசாகும். சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ அரிசி, 200 ஆடுகள் 600 கோழிகள் ஆகியவற்றை சமையல் செய்து 50 பாத்திரங்களில் பிரியாணி தயார் செய்யப்பட்டு மக்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
வடக்கம்பட்டி மக்களின் வாழ்க்கையில் மறு மலர்ச்சி ஏற்படுத்திய முனியாண்டி சாமி…இன்னமும் அதே கோலத்தில்தான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்… புதிதாக கட்டப்பட்டிருக்கும் சிறிய கோவில் தவிர, எந்த மாற்றமும் அவரிடம் இல்லை..ஆனால்… அவர் நடப்பதையெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *