வங்கியில் 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி 50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ‘பான்’ எண்ணை குறிப்பிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியுள்ளார்.
2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லும் என்றும், அதற்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு, நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு அங்கம் எனவும், நமது நாணய மேலாண்மை நடவடிக்கை மிகவும் வலுவானது என கூறினார். மேலும் வங்கி கணக்கில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் செலுத்துபவர்கள் ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கும் நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் அது பொருந்தும் என கூறியுள்ளார்