சிட்னியில் இந்திய வம்சாவளிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவின் வலுவான மற்றும் மிகப்பெரிய அடித்தளம் பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும், அதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் இந்திய வம்சாவளிகள்’ என புகழ்ந்து பேசினார். பிரதமர் மோடி தனது 3 நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். சிட்னியில் உள்ள குடோஸ் வங்கி அரங்கில் நேற்று அவர் இந்தியா வம்சாவளிகள் மத்தியில் உரையாற்றினார்.
இதில், அரங்கம் முழுவதும் குவிந்த 21,000 இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவை வரையறுக்கும் முன்பு 3சி-க்கள் இருந்தன. அவை, காமன்வெல்த், கிரிக்கெட் மற்றும் கறி (இந்திய உணவு). அதன்பிறகு அது 3டி-க்கள் ஆகின. அவை, ஜனநாயகம், புலம்பெயர்ந்தோர் மற்றும் தோஸ்தி (நட்புறவு). பின்னர் 3இ-க்கள் ஆகின. அது, எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் கல்வி. ஆனால் இந்த சி, டி, இ-ஐ தாண்டி இருதரப்பு உறவின் உண்மையான ஆழம், நம்பிக்கை. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவின் வலுவான மற்றும் மிகப்பெரிய அடித்தளம் பரஸ்பர நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும்தான். அதற்கான பின்னணியில் உள்ள உண்மையான காரணம், புலம்பெயர்ந்த இந்தியர்கள்.
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் தூரம் அதிகம் இருந்தாலும், இந்திய பெருங்கடல் நம்மை இணைக்கிறது. இரு நாடுகளிலும் வித்தியாசமான வாழ்க்கை முறைகள் இருந்தாலும், யோகா நம்மை இணைக்கிறது. கிரிக்கெட், நம்மை பல ஆண்டுகளாக இணைக்கிறது. இப்போது டென்னிஸ் மற்றும் திரைப்படங்கள் மற்ற இணைப்புப் பாலங்களாக உள்ளன. கிரிக்கெட் மைதானத்தில் போட்டி எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அவ்வளவு ஆழமான நட்பு மைதானத்திற்கு வெளியே உள்ளது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இறந்தபோது, லட்சக்கணக்கான இந்தியர்கள் வருத்தமடைந்தனர்.
உலகப் பொருளாதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியாவை சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கருதுகின்றன. கொரோனா சமயத்தில் தடுப்பூசி தயாரிப்பது போன்ற மிகவும் சவாலான காலகட்டத்திலும் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் திறமைக்கும், வளங்களுக்கும் குறைவில்லை. இன்று, உலகின் அதிகமான மற்றும் இளமையான திறமையாளர்களை கொண்ட நாடு இந்தியா. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்