பணவீக்கத்தை பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்கு தகுதியே இல்லை என பெங்களூருவில் வாக்கு செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
காலை முதலே மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் எனப் பலரும் வாக்களித்தனர்.
இந்நிலையில், இன்று காலை பெங்களூரு ஜெயநகரில் உள்ள பாரத் எஜுகேஷன் சொசைட்டி வாக்குச்சாவடியில்,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நீண்ட வரிசையில் மக்களோடு மக்களாக காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், பணவீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசினார்.
அப்போது, நாட்டில் பணவீக்கம் ஏற்பட்ட போது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று நடவடிக்கைகள் மேற்கொண்டதாக தெரிவித்த அவர்,பணவீக்கம் குறித்தெல்லாம் பேச எதிர்க்கட்சிகளுக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை என்றும், அவர்கள் தங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை திரும்பி பார்க்க வேண்டும் என்று காட்டமாக பேசினார்.
மேலும், பஜ்ரங் தல் அமைப்பிற்கு தடை விதிக்கும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி பற்றி பேசிய அவர்,
இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.