
வழக்கமாகச் சப்பாத்தி மற்றும் பூரிக்கு குருமாதான் பிரதான சைடிஷாக இருக்கும். சில சமயங்களில் சிக்கன் அல்லது மட்டன் வைத்துச் சைடிஷ் செய்யலாம்.
ஆனால் எல்லா நேரத்திலும் இவற்றையே செய்து கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் புதிய சைடிஸ்களை முயற்சித்து பார்க்க வேண்டும்.
புதிய சைடிஷ் என்று வரும்போது அதை மீல்மேக்கரை வைத்து முயற்சிக்கலாம். சரியான விதத்தில் செய்தால் மீல் மேக்கரையே அசைவ உணவுகளைவிட அட்டகாசமான சுவையில் செய்யலாம்.
இந்தப் பதிவில் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு மீள மேக்கரை வைத்து எப்படி சூப்பரான சைடிஷ் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- மீல்மேக்கர் – 150 கிராம்
- நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
- மல்லித்தூள் – 3 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
- முந்திரிப்பருப்பு – 6
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 10 பல்
- பட்டை – 2 துண்டு
- கல்பாசி – 1 ஸ்பூன்
- கிராம்பு – 4
- சோம்பு – 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு:
பட்டை, சோம்பு, கறிவேப்பிலை – சிறிதளவு
வறுத்து அரைக்க:
- சின்ன வெங்காயம் – 15
- மிளகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- தக்காளி – 2
செய்முறை:
- தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கர், சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு தண்ணீரை வடிகட்டிப் பச்சைத் தண்ணீரில் இரண்டு தடவை அலசித் தண்ணீரை நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பும், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, கிராம்பு, கல்பாசி சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றிப் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
- அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
- பின்னர் அதனுடன் தக்காளியும் சேர்த்து சிறிது வதக்கி விட்டு மீல்மேக்கர் சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலா விழுது, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கி மல்லி இலை தூவி கலந்து விட்டால் கறிக்குழம்பு ஸ்டைல் மீல்மேக்கர் கிரேவி ரெடி.
இந்தக் கிரேவி சாதம், இட்லி, சப்பாத்தியென அனைத்திற்கும் சூப்பரா இருக்கும்.
