லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான எலிமினேட்டர் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 81 ரன் வித்தியாசத்தில் வென்று குவாலிபயர்-2 ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது.சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது. இஷான், ரோகித் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 30 ரன் சேர்த்தனர். ரோகித் 11 ரன், இஷான் 15 ரன் எடுத்து ஆட்டமிழக்க, மும்பை 4.2 ஓவரில் 38 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்நிலையில், கிரீன் – சூர்யகுமார் இணைந்து அதிரடியாக விளையாடிய ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தது. சூர்யகுமார் 33 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கிரீன் 41 ரன் (23 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி நவீன் வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி பின்னடைவை சந்தித்தது.
டேவிட் 13 ரன், திலக் வர்மா 26 ரன் (22 பந்து, 2 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். ஜார்டன் 4 ரன்னில் வெளியேற, கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நெஹல் வதேரா 23 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார். மும்பை 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. லக்னோ பந்துவீச்சில் நவீன் 4, யஷ் தாகூர் 3, மோஷின் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்னுக்கு 10 விக்கெட்டையும் இழந்து, 81 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 40 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மும்பை பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் அட்டகாசமாக பந்துவீசி 3.3 ஓவரில் 5 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்