
அவர் யார்? சாமான்ய மனிதரா? புரட்சிகரவாதியா? ஆன்மீகவாதியா? முற்றும் உணர்ந்த மகானா? – கேள்விப்படுபவர்கள் அவரைக் கடவுளாகவே வணங்குகிறார்கள். தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாகவே அவருக்கான கோவில்கள் பெருகி வருகின்றன. பக்தர்கள் அயிரக்கணக்கில் இருந்து, இப்போது பல லட்சங்களாக மாறி இருக்கிறார்கள். நாடார் சமூகத்தினர் மட்டுமல்லாது பல்வேறு சமூகத்தினரும் கூட கடவுளாக கருதும் அவரது பெயர் “அய்யா வைகுண்ட சாமி” .ஒரு புராணப் படம் போல அவரது பிறப்பும், வளர்ப்பும் நிறைந்த “பிளாஷ் பேக்” சம்பவங்கள் அனைவரையும் பக்தி பரவசப்பட வைக்கிறது.
அது 19-ம் நூற்றாண்டின் மன்னர்கள் காலம்… குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியும், வேறு சில மாவட்டத்தின் முக்கிய பகுதிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தது. அப்போதெல்லாம் “சங்கரஸ்மிருதி” என்கிற சட்ட நூல் அடிப்படையில் 64 அனாசரங்கள் மூலம் சமூக அமைப்பை மேல்சாதி, கீழ் சாதி எனப் பிரித்து வைத்திருந்தனர்.”நாடார்கள்” உள்பட 18 சாதியினர் கீழ் சாதியினர் எனவும், அவர்கள் உயர் சாதியினரைக் கண்டால் 12 அடி முதல் 36 அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும் எனவும்…
காலில் செருப்பு அணியக் கூடாது பொதுக் கிணறில் தண்ணீர் எடுக்க கூடாது, மழை பெய்தால் குடை பிடிக்க கூடாது, இடுப்பில் குடம் எடுக்க கூடாது, தலைப்பாகை அணியக் கூடாது, பெண்கள் மாராப்பு போடக் கூடாது, தாலிக்கு வரி கட்டவேண்டும்,, ஓட்டு வீடு கூடாது, பசு மாடு பக்கம் செல்லக் கூடாது, கோவிலுக்குள் செல்லக் கூடாது. ஆண்கள் துண்டை இடுப்பில்தான் கட்டியிருக்க வேண்டும்,. இது போல் வன்கொடுமைச் சட்டங்கள் நிறையவே இருந்தன.
குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம், தோவாளையை ஒட்டி தாமரைக்குளம் என்றொரு கிராமம். அதுதான் இப்போதுள்ள சாமித்தோப்பு. இந்குதான் மனித ரூபத்தில் பிறந்தார் அந்த மகான். பெயர் வைகுண்ட சாமி. 1809-ல் பொன்னு நாடார்- வெயிலாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். முதலில் ‘முடி சூடும் பெருமாள்’ எனப் பெயரிடப்பட்டு, பின்னர் ‘முத்துக்குட்டி’ என்று அழைக்கப்பட்டவர். இவர்கள் ‘பூவண்டர்’ என்பவருக்குச் சொந்தமான தோப்பில் சிறு குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்,
முத்துக் குட்டிக்கு 22 வயதிருக்கும் போது திடீரென ஒருநாள் படுத்த படுக்கையாகி விட்டார். தீராத வியாதிக்குட்பட்டு ஓராண்டாக அவர் எழவே இல்லை. உறவினர்கள் அனைவரும் “எல்லாம் முடிந்து விட்டது” என்று கருதியிருந்த வேளையில் வெயிலாள், விஷ்ணுவிடம் நீண்ட நேரம் மனமுருகி வேண்டி விட்டு படுக்கைக்குச் சென்றார்.
நள்ளிரவில் வெயிலாள் கனவில் தோன்றிய விஷ்ணு ”முத்துக்குட்டியை மாசி விழாவுக்கு திருச்செந்தூர் அழைத்துப் போ…அவன் மகானாகத் திரும்புவான்” என்று சொல்லி, மறைந்து விட்டார்.அப்போதெல்லாம் வாகனங்களோ முறைப்படியான பாதைகளோ கிடையாது. உற்றார், உறவினர்கள் சேர்ந்து ஒரு தொட்டில் அமைத்து அதில் முத்துக்குட்டியை படுத்த நிலையில் தூக்கிக் கொண்டு, கால் நடையாக காட்டுப் பாதையில் புறப்பட்டனர்.அதிகாலையில் கிளம்பிய அவர்கள் மதிய வேளையில் ஒரு ஆற்றங்கரை அருகே மதிய உணவை உண்டுவிட்டு, ஓய்வெடுத்த சமயத்தில் அப்படியொரு அதிசயம் நடந்தது.
படுத்த படுக்கையாக இருந்த முத்துக்குட்டி திடீரென எழுந்து ஓடத் தொடங்கலானார். செய்வதறியாது திகைத்த உறவினர்களும் பின்னால் ஓடி வந்தனர். முத்துக்குட்டி நேராக திருச்செந்தூர் சென்று, அங்குள்ள கடலில் மூழ்கினார். இரண்டு நாட்களாகியும் அவர் திரும்பவில்லை. முத்துக்குட்டிக்கு ஏதோ பித்துப் பிடித்து, தப்பு நடந்து விட்டது என்று கருதிய உறவினர்கள் வீடு திரும்பி விட்டனர். வெயிலாளுக்கு மட்டும் நம்பிக்கை போகவில்லை. கவலையுடன் கரையில் காத்திருந்தார்.
என்ன ஆச்சர்யம்?. 3-வது நாள் கடல் நீர் வழிவிட, உள்ளிருந்து முத்துக்குட்டி திரும்பி வந்தார்.இது நடந்தது 1833-ம் ஆண்டு மார்ச் மாதம்4-ம் தேதி அதாவது மாசி மாதம் 20-ம் தேதி. மகனைக் கட்டித் தழுவ ஓடோடி வந்த வெயிலாளிடம்”நான் உனது மகன் அல்ல. விஷ்ணுவின் மனித அவதாரம்” என்றபடி வேறு எதையும் எதிர்பாராமல் அவர் நடக்கத் தொடங்கினார்.போகிற வழியில் ஒரு பனைமரத் தொழிலாளியிடம் ”எனக்குத் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் பதநீர் தாயேன்” என்றார்.அந்தத் தொழிலாளி ஒரு கலயம் நிறைய பதநீர் கொடுத்தார். வைகுண்டர் வயிறார அதனைக் குடித்து காலி செய்து விட்டு திருப்பித் தந்த போது என்ன ஆச்சர்யம்? கலயம் நிறைய பதநீர் அப்படியே இருந்தது.
தொடர்ந்து தெய்வீக ஆச்சர்யங்கள் செய்தபடியே வைகுண்டர், பூவண்டர் தோப்பு சென்றடைந்து அங்குள்ள புனித மண், புனித நீரால் தம்மைத் தேடி வருவோரைக் குணப்படுத்தினார். அனைத்து சாதியினரும் அவரைத் தேடி வரலாயினர். விஷயம் காட்டுத்தீ போல் பரவியது. மேல் குடிகாரர்களுக்கு வைகுண்டர் மீது கோபம் கொப்பளித்தது.. வைகுண்டரைக் கைது செய்து கொல்ல முடிவெடுத்தனர். அதன்படி மன்னருக்கு ஆலோசனைகள் தரப்பட்டு சுசீந்திரம் வந்திருந்த அவரும் வைகுண்டரை கைது செய்ய ஆட்களை அனுப்பி வைத்தார். அவர்கள் வைகுண்டரைப் பிடித்து பாறாங்கயிறால் கட்டி, நடை பயணமாக சுசீந்திரம் இட்டுச் சென்றனர்.
அவரை திருவனந்தபுரத்தில் புழு, பூச்சிகள் நிறைந்த சிறைக் கூடத்தில் அடைத்து பாலில் விஷம் கலந்து கொடுத்தனர். சுண்ணாம்புக் காள வாயிலில் வைத்துப் பூட்டினர். மிளகாய் மூட்டைகளுக்கு தீ வைத்து புகை வரச் செய்தனர். எரியும் நெருப்பில் தள்ளி விட்டனர். இதுவும் போதாதென்று காட்டுப் புலியை பிடித்து வந்து ஒரே கூண்டில் வைகுண்டரையும் அடைத்து வைத்தனர். அப்போதும் ஒரு அதிசயம் நடந்தது. அந்தப் புலி ஏவி விட்டவரையே கடித்துக் குதறியது. இவை எல்லாவற்றையும் அமைதி காத்தவாறே உயிரோடு மீண்டு வந்தார் வைகுண்டர்.
வேறு வழி எதுவும் தெரியாமல் 120 நாட்கள் சிறை வாழ்க்கைக்கு பின்னர் அவரை விடுதலை செய்வதாக அறிவித்தனர். வைகுண்டரோ எனது இஷ்டப்படிதான் வெளியே வருவேன் எனக் கூறி மறுநாள் வெளியே வந்தார். ஏராளமான பேர் அங்கு திரண்டு வந்து அய்யா வைகுண்டரை சாமித்தோப்புக்கு அழைத்து வந்தனர்.
அங்கு தவமிருந்த அய்யா வைகுண்டர் பொதுக் கிணறு ஒன்றை உருவாக்கி அதில் அனைத்து சாதியினரையும், குளிக்கவும், குடிக்கவும் வழிகள் செய்தார். “உருவ வழிபாடு கூடாது, பூஜை-புணஸ்காரம் கூடாது, அன்னதானம் செய்ய வேண்டும், புலால் உண்ணக் கூடாது” என்றார். அவரது கொள்கைகள்தாம் பின்னர் “அய்யாவழி”யாக மாறி, இப்போது ஜாதி, மத பேதமற்று அனைவரும் செல்லும் கோவிலாக இருக்கிறது.
”அய்யா சிவ,சிவ அரகரா,அரகரா என தினமும் 5 வேளை சொல்லி வர, நினத்தது நடக்கும் என்பது அவரது சீடர்கள் சொல்லிய அருள் வாக்காகும்.எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்பதை”அகிலத்திரட்டு” என்ற ஓலைச் சுவடியில் எழுதி வைத்த வைகுண்டர் 1851-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி பகல் 12 மணிக்கு மறைந்தார்.
சாமித் தோப்பில் அவர் குடிகொண்டிருந்த கோவில் இப்போதும் பக்தி பரவசமாக காட்சியளிக்கிறது.வைகுண்டர் கட்டளைப்படி அவரது பக்தர்கள் ஜோதி போல் நெற்றியில் திருநாமம் இட்டு, இடுப்பில் கட்டியிருந்த துண்டை தலையில் கவசமாகக் கட்டி, கோவினுள் சென்று அங்கிருக்கும் கண்ணாடி பிம்பத்தில் தன்னையே பார்த்து வணங்குகின்றனர்.சாமித்தோப்பில் அய்யா வைகுண்டர் பயன்படுத்திய கட்டில், கைத்தடி, அவரது ஏடு, துளசி மாலை. சங்கு, தண்டை ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருகிறது.