தலைவர்களாகப் போகும் தலைவர்களின் மகன்கள்-‘வரிந்து கட்டும் வாரிசுகள்’

Advertisements

சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை
முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்,முன்னாள் அமைச்சர்கள்
பொன்முடி மகன் கவுதம சிகாமணி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஆற்காடு
வீராசாமி மகன் கலாநிதி, தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் எனப்
பலர் அரசியல் களத்தில் குதித்த நிலையில்..வாரிசு அரசியல் என்பது தற்போது
தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
இதே போல் முன்னாள் தலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன்,தேமுதிக
தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், மதிமுக பொதுச் செயலாளர் மகன்
துரை வையாபுரி,புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம்,
தாயக மறுமலர்ச்சிக் கழகத் தலைவர் டி. ராஜேந்தர் மகன் நடிகர் சிம்பு எனப் பலத்
தலைவர்களின் வாரிசுகள் இப்போது அரசியல் களத்தில் குதிக்க காத்திருக்கிறார்கள். –
‘இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்க
கூடாது.
மூத்த தலைவர்களில் பலர் தங்களுக்கு வயதாகி விட்ட நிலையிலும், கட்சிகளில்
நம்ப முடியாத விசுவாசிகள் தற்போது பெருகி விட்டதாலும், வேறு யாரும் வலிமை
பெற்று விடக் கூடாது என்பதற்காகவும், புதிய தலைவர்களை எதிர்நோக்கும் இளைய
தலைமுறைகளாலும், தங்கள் சொத்து, பத்துக்களை பாதுகாக்கவும்..இப்படி பலவித
காரணங்களுக்காக “ஏன் எனது மகனை அரசியல் வாரிசாக்க கூடாது” என்ற
முடிவுக்கு வந்திருக்கிறார்கள் பல தலைவர்கள்.
வாரிசு அரசியல் என்பது தமிழகத்திற்கோ அல்லது இந்தியாவிற்கோ ஒன்றும்
புதிதல்ல. இந்திராவுக்குப் பின் ராஜீவ், சோனியாவுக்குப் பின் ராகுல், காங்கிரஸ்
கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்,
மாதவராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி முதல்வர் ஷீலா
தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகிய பலர் வாரிசு அரசியலுக்கு ஆதாரமாக
விளங்குகின்றனர்.
சுதந்திர இந்தியாவில் 1999 முதலான உறுப்பினர்களில் பரம்பரையாக மக்களவைக்கு
வருகிற காங்கிரசாரின் எண்ணிக்கை 39; பாஜகவினரின் எண்ணிக்கை 31. நாட்டின்

Advertisements

பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் செல்வாக்குமிக்க 51 அரசியல்
குடும்பங்களில் 17 பாஜகவினுடையது. 15 காங்கிரசினுடையது.
மோடி அரசின் முதலாவது ஆட்சியில் இடம்பெற்ற 75 அமைச்சர்களில் 15 பேர்
குடும்ப வாரிசுகள்; மக்களவையில் பாஜகவின் 38 உறுப்பினர்களின் தந்தையர்
முதல்வர்களாகவோ, துணை முதல்வர்களாகவோ பதவி வகித்தவர்கள். பாஜகவின்
மாநில முகங்களான முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங்,
பிரேம்குமார் தூமல், வசுந்தரா ராஜே சிந்தியா, சிவ்ராஜ் சிங் சௌஹான், எடியூரப்பா,
ரமண் சிங் யாவரின் மகன்களும் பாஜகவில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக்
கொண்டிருக்கின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் ஷேக் அப்துல்லாவைத் தொடர்ந்து அவரது மகன் பரூக்
அப்துல்லா தலைவரானார் பின்னர் முதல்வரானார். பின்னர் பரூக் அப்துல்லா மத்திய
அமைச்சரானதும்,மூன்றாவது தலைமுறை வாரிசான உமர் அப்துல்லா தற்போது
காஷ்மீர் மாநில முதல்வராக உள்ளார்.உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில்
சமாஜ்வாதி மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியை தனது மகன்
அகிலேசுக்கு வழங்கினார் முலாயம் சிங்.
சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே தனக்குப் பின் தனது வாரிசான உத்தவ்
தாக்கரே கட்சியை கவனித்துக் கொள்வார் என்று அறிவித்தார். அவரது மறைவைத்
தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஒடிசாவில் முதலமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக்கைத் தொடர்ந்து அவரது மகன்
நவீன் பட்நாயக்கும் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சித்தலைவருமான
தேவகவுடாவின் மகன்கள் மகன் குமாரசாமி கட்சித் தலைவராகவும் கர்நாடக
மாநிலத்தின் முதல்வராகவும் பதவியேற்றார்.
ஆந்திராமாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து முடிசூடா மன்னராக
விளங்கிய என்.டி.ஆர் உயிரோடு இருக்கும் போதே என்.டி.ஆரின் மருமகன் சந்திரபாபு
நாயுடு கட்சியை உடைத்து தன்னை முன்னிலைப்படுத்தி ஆட்சியையும் கைப்பற்றி
காட்டினார்.
ஆந்திராவின் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவுக்குப் பிறகு
அவரது மகன் ஜெகன் மோகன் ஒதுக்கப்பட்டார். ரோசய்யா முதல்வராக
அறிவிக்கப்படவே எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனிக்கட்சி
தொடங்கினார் ஜெகன். இடைத்தேர்தலில் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்
ஜெயித்து தனது அரசியல் பலத்தையும் நிரூபித்து இருக்கிறார்.

என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணா, மகள் புரந்தேஸ்வரி ஆகியோர் தீவிர
அரசியலில் ஈடுபட்டுள்ளனர். மகள் தற்போது மத்திய இணை அமைச்சராக
அமைச்சராகவும் இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்,
சந்திரபாபு நாயுடுவின் மகன், நர லோகேஷ்,அரசியலில் இறங்க உள்ளார்.
தமிழகத்தில் கருணாநிதிக்குப் பிறகு திமுகவில் யார் தலைவர் என்ற பேச்சு
அவ்வப்போது எழுந்தாலும், ஸ்டாலினை சூசகமாக முன்னிலைப்படுத்தி வந்தார்.
எனினும் மு.க. அழகிரி, கனிமொழி ஆகியோருக்கும் அரசியல் பொறுப்புகள்
வழங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜி.கே.
மூப்பனாரின் அரசியல் வாரிசாகவே அவரது மகன் ஜி.கே. வாசன் திகழ்கிறார்.
பாமகவில் ராமதாஸுக்குப் பின்னர் அடுத்த தலைவர் யார் என நேரடியாக
அறிவிக்கப்படவில்லை எனினும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்தான்
முன்னிலைப் படுத்தப்படுகிறார்.
தமிழக காங்கிரசின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகள் தமிழிசை
சவுந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்து தற்போது ஆந்திர மாநில
கவர்னராகி இருக்கிறார்.
இந்தியர்கள் மரபு வழியிலான குடும்ப அமைப்பில் இருந்து வருபவர்கள். எனவேதான்
இந்திராகாந்தி காலத்திலிருந்தே வாரிசு என்பதற்காக மக்கள் ஒருவரைப்
புறக்கணித்ததே இல்லை. ஒருவேளை வாரிசுகளின் செயல்பாடுகள் பிடிக்காமல்
மக்கள் அவர்களைத் தோற்கடித்திருக்கலாமே ஒழிய, வாரிசுகள் என்ற
காரணத்திற்காக மக்கள் அவர்களைப் புறக்கணித்ததில்லை.
அப்படி இதுவரை அரசியலில் வாரிசுகள் ஜெயித்திருக்கலாம். ஆனால் இனிவரும்
காலங்களில் அரசியல்வாரிசுகள் ஜெயிப்பார்களா? என்பதை காலம்தான்
பதில்சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *