ஆவின் சாா்பில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுப்பாடின்றி உரிய நேரத்தில் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுப்பது தொடா்பான ஆய்வு கூட்டம் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமையில் நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,ஆவினில் தற்போது 34 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு மலிவான, தரமான பொருள்களாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.மேலும், குறுகிய காலத்தில் ஆவின் பொருள்களின் தரத்தை உயா்த்துவது குறித்தும், பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.பொதுமக்களின் தேவை அறிந்து பொருள்களை உற்பத்தி செய்வோம் என தெரிவித்த அமைச்சர், ஆவின் பொருள்களின் தரத்தை உயா்த்தி மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும் என்றார்.இந்த கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் மீனவா் நலத்துறை முதன்மைச் செயலா் காா்த்திக்,பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சுப்பையன்,
ஆவின் இணை நிா்வாக இயக்குநா் சரயு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.