இந்தியா ,பர்மா, இலங்கை ,பிலிப்பைன்ஸ் ,மலேசியா ,பிரேசில் என உலகின் சில குறிப்பிட்ட நாடுகளில் பலாப்பழ மரங்கள் வளர்கின்றன.
இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தான் பலாப்பழ மரங்கள் முதலில் தோன்றின. இதன் பின்னர் தான் உலகின் பல நாடுகளுக்கு பலாப்பழம் அறிமுகமானது. இந்தியாவை பொறுத்தவரையில் பலாப்பழத்திற்கு கேரள மாநிலம் புகழ்பெற்றதாகும்.
கேரள மாநிலத்தை பொருத்தவரையில் அந்த மாநிலத்தின் மரம் தென்னை மரமாகவும் விலங்கு யானை ஆகவும் இருக்கும் பட்சத்தில் பலாப்பழம் மாநில பழமாக கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
கேரள மாநிலம் ஆண்டுதோறும் 35 கோடி பலாப்பழங்களை இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறது.
பலாப்பழ மரங்கள் பொதுவாக உரமே இல்லாமல் இயற்கையாகவே வளரக்கூடியவை. பலாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன .சிறுநீர் குழாயை சுத்தப்படுத்துதல், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், ரத்த ஓட்டத்தை சீர் செய்தல் எனபா பல வகையான நன்மைகள் இதில் உள்ளன .எனினும் இந்த பழத்தை அளவோடு தான் சாப்பிட வேண்டும் அளவுக்கு அதிகமானால் வயிறு உப்புசம் ஏற்படும்.
இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பலாப்பழ சீசன் ஆகும் .எனவே அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு டன் கணக்கில் பலாப்பழங்கள் வர ஆரம்பித்துள்ளன. இதனால் தமிழகத்தில் நாலு பலாச்சுளை பத்து ரூபாய் என்கிற அளவில் விற்கப்படுகிறது. வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றும் பழ வகைகளில் முதலிடம் பிடித்த பழங்களாகும்
பலாப்பழம் தவிர பலா கொட்டையும் மிகவும் ருசியானது. தமிழகத்தில் சாம்பாருடன் பலாப்பழ கொட்டை சேர்க்கப்படுகிறது. தனியாக பொறியலும் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது