கந்தசஷ்டி விரதம் என்பது முருகனின் அருளை பெற கடைபிடிக்கப்படும் ஒரு முக்கிய விரதமாகும்.
ஒரே ஒரு நாள் மட்டும் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு ஏழு நாட்கள் விரதம் இருந்த பலனை அடைய முடியும். ஒரு நாள் விரதம் இருப்பவர்கள் முருகனின் அருளை பெற என்ன மந்திரம் சொல்லி, எந்த நேரத்தில், என்ன நைவேத்தியம் படைத்து வழிபடலாம் என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
கந்தசஷ்டி விரதம் என்பது ஐப்பசி மாத வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் தொடங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும். ஆனால் அனைவராலும் ஏழு நாட்கள் விரதம் இருக்க முடியாது. அதனால், ஆறாம் நாள் சஷ்டி திதியான சூரசம்ஹாரம் நடைபெறும் நாளன்று மட்டும் விரதம் இருந்து வழிபடலாம்.
சூரசம்ஹாரம் நடைபெறும் சஷ்டி அன்று ஒரே ஒரு நாள் விரதம் இருப்பவர்கள் அன்று நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அன்றைய நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும் என்பதால் காலை நைவேத்தியம் எதுவும் படைத்து வழிபட வேண்டிய அவசியம் இல்லை.
இன்று நவம்பர் 07ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, காலை 6 முதல் 7 மணிக்குள் முருகன் படத்தைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும்
ஷட்கோண கோலம் வரைந்து ச, ர, வ, ண, ப, வ என்ற ஆறு எழுத்துக்களிலும் காலை, மாலை இருவேளையும் 6 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
முருகனின் படத்தில் இருக்கும் வேலுக்கு சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து, முருகனின் அருளை வேண்டி விரதம் இருக்க வேண்டும். கோயில் அல்லது வீடு எங்கு வேண்டுமானாலும் விரதம் மேற்கொள்ளலாம். விரதம் கடைபிடிப்பவர்கள் பகலில் தூங்கவோ, டிவி பார்த்துப் பொழுதைப் போக்கவோ கூடாது. அதேபோல அன்று ஒரு நாள் முழுவதும் காலில் செருப்பு அணியாமல் இருக்க வேண்டும்.
சூரசம்ஹாரம் முழுவதுமாக நிறைவடைந்த பிறகு வீட்டிற்கு வந்து குளித்து விட்டு மீண்டும் வீட்டில் ஷட்கோண தீபம் ஏற்றி, பூஜை செய்ய வேண்டும். கோயிலுக்குச் சென்று விரதம் இருப்பவர்கள் அங்குத் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். வீட்டிலிருந்து விரதம் இருப்பவர்கள், குளித்து விட்டு, தீபம் ஏற்றி, சர்க்கரை பொங்கல், பால், பழம் அல்லது ஆறு வகையான சாதத்தை நைவேத்தியமாகப் படைத்து வழிபட்டு அவற்றைச் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
“சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.”
என்ற பாடலைப் படிக்க வேண்டும். “உன்னுடைய வேல் பட்டுச் சூரனும், அவனது ஆணவமும் அழிந்து, சேவலாகவும், மயிலாகவும் மாறி விட்டது. அதுபோல உன்னுடைய கால் பட்டு என்னுடைய மோசமான தலையெழுத்து அழிந்து போகச்செய் முருகா. என்னுடைய துன்பத்திற்கு காரணமான தலையெழுத்து எவ்வளவு மோசமாக இருந்தாலும் உன்னுடைய திருவடியை என்னுடைய தலைமேல் வைத்து அதை அழித்து, என்னுடை வாழ்க்கை சிறப்படைய, வளமானதாக மாற அருள் செய் முருகா” என மனதார வேண்டி வழிபட்டால் ஒரே ஒரு நாள் விரதம் இருந்தாலும் முருகனின் அருளை பரிபூரணமாகப் பெற முடியும்.