பேருந்து தாமதமாக வருகிறதா?, பேருந்துக்காக அதிக நேரம் காத்திருப்பதா?,
ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கிறார்களா?, பயணிகளின் பொருட்கள்
பஸ்ஸில் தொலைந்து போய் விட்டதா? பேருந்துகளில் பணியாளர்கள் தவறான
நடத்தை உள்ளிட்ட இன்னும் பல புகார்களை இனி ஒரே ஒரு போன் கால் மூலம்
நீங்கள் அரசுக்கு தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள்
மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைக் கண்டறியவும், அவர்களின் குறைகள்
மற்றும் புகார்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த பயணிகள்
குறை மற்றும் புகார் தீர்வு உதவி மையம் அமைக்கப்படும் என போக்குவரத்துத்
துறை அமைச்சர் சிவசங்கர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பேருந்து உதவி மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான இலவச எண்
1800 599 1500 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கு அழைப்புக் கட்டணம்
எதுவும் இல்லை. பயணம் செய்யும் பயணிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும்
பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள்
கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
புகார்கள், குறைகள் மற்றும் தகவல்களையும் பெறலாம்.
பயணிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதற்கான வசதி
பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில்
அமைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகள் பிரத்யேக அடையாள
எண் ஒதுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஒப்புகை குறுந்தகவல்
பயணிகளுக்கு அனுப்பப்படும். பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த
போக்குவரத்து கழகங்கள் உடனுக்குடன் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கம் தொடர்பான விசாரணை, பண்டிகைக் கால சிறப்பு பேருந்து
இயக்கம் போன்ற தகவல்களையும் பெறலாம்..
பஸ் லேட்டா வருதா…? கண்டக்டர் எரிந்து விழுகிறாரா…?ஒரு போன் கால் போதும் !
Advertisements